பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் 1

வணங்கினர் என்பது மட்டுமன்று. கலைஞன் என்ற முறையில் அக் கடவுள் தன்மைகூட மனிதரின் இயற்கை மனஎழுச்சியாகக் காட்டப்படவில்லை. இராமர் கதை, கண்ணன் கதைகூட சிலப்பதிகாரத்தில், வாழ்க்கையோடு இணைந்த கலை நயத்துடன் காட்டப் பெறுகின்றன என்பது காணலாம்.

“சோவரணும் போர்முடியத் தொல்லிலங்கை கட்டழிந்த சேவகன் சீர்கேளாத செவி என்ன செவியே

திருமால் சீர்கேளாத செவி என்ன செவியே"

இங்கே திருமால் சிறப்பு, வணங்குபவர் மனதில் அவர் போர் வீரம் பற்றிய வியப்பாகக் கூறப்படுதல் காண்க. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் 'காலத்திற்கேற்ற கோலம்' போட்டவ ராயினும் கம்பரினும் தமிழ்க்கலைத்திறன் பேணியவர் எனலாம். சீதையை அன்னையாக்கிய பின் அன்னையாகப் புனைந்துரைக்கப் பல இடங்களில் கம்பர் தவறினர். ஆனால் சேக்கிழார் ஒரு தடவை ஒரு கருத்தை மேற்கொண்டபின் அந் நெறியிலேயே பழந் தமிழ்க் கவிஞர் போல் நிற்றல் காணலாம். வணக்கத்திற்குரிய பெண் பாவலர் அழகைக் கூறும்போதெல்லாம் காண்பவர் மனத்தில் எழும் தூய அழகுணர்ச்சியே குறிப்பிடப்படுகின்றது. ‘கற்பகத்தின் கொம்பொப்பாள்'. 'காண்டகு நற்காட்சியினாள்' போன்ற தொடர்கள் அவர் அறிவுறுத்திறனுக்கும் கலைத் திறனுக்கும் எடுத்துக்காட்டாகும். ஆயினும் சங்ககாலக் கவிஞர் இக் கதைகளைப் படர்க்கைப் பாட்டில் நாடக முறையில் இன்னும் திறம்படக் கூறியிருப்பார் என்பது உறுதி.