பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. முற்காலப் பிற்கால வாழ்க்கைப் போக்குகள்

பழைய சங்க நூல்களினின்றும் பிற்கால நூல்களினின்றும் அவ்வக் கால மக்கள் ஊண், உடை, நடை, எண்ணங்கள், சமயம், அரசியல், வாழ்க்கைப் பொருள்கள், கலையறிவு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்களைத் தொகுப்பதானால் அப்போது நம் நாட்டின் சென்ற இரண்டாயிர ஆண்டுப் போக்கு முற்போக்கு அன்று, பெரிதும் பிற்போக்கு என்பதைக் காணலாம். பழங்காலத் தமிழரிடை உழவு, வாணிகம், போர், தொழில்கள் ஆகிய பலவும் ஒத்த சிறப்புடையவையாகவே குறிக்கப்படுகின்றன. காதலும் சமயமும் ஒருங்கே சிறப்பிக்கப்படுகின்றன. ஆனால் பிற்காலத்தார் உழவை உயர்த்தினர்; பிறவற்றுக்கு மதிப்புக் குறைத்தனர். தற்காலத்திலும் உழவை உயர்த்திக் கூறுவதுண்டு. ஆனால் இப்புகழுரை வெற்றுரை என்பதை உழவர் வாழ்வில் காணலாம். பெருநிலக் கிழவரை உயர்வுபடுத்திப் பயனடையும் முகப் புகழ்ச்சியேயன்றி இது வேறில்லை. வடமொழியில்- பிற்கால நூல்கள் உயர்வாகக் கொள்ளும் தெய்வீக மொழியில் - இந் நயவஞ்சகத்துக்கு இடமின்றி உழவர் உரிய இடத்தில் வாழ்க்கை வகுப்பில் (வருணத்தில் நான்காம் இடத்தில் வைக்கப்பட்டனர். பிற்கால நூல்களில் இல்லறம் பசப்பிப் புகழப்பட்டது.

சங்க கால வாழ்வில் சமயம் வாழ்க்கையின் ஒரு பகுதி. பிற்கால வாழ்வில் வாழ்க்கை சமயத்தின் பகுதி. சங்க காலத்தில் சமய ஆராய்ச்சியும் கோட்பாடும் ஓர் அறிவுத்துறைப் பொழுதுபோக்கு. பிற்காலத்தில் அது பொதுமக்களைப் பிணிக்கும் இருப்புச் சட்ட மாக ஆகிவிட்டது.

சங்க காலத்தில் கல்வி அனைவர்க்கும் பொது; கற்றவர் பிறர்க்கு அறிவுரை கூறி உலகை நல்வழிப்படுத்த அதனைப்