வருங்காலத் தமிழகம்
17
உலகெங்கும் பரந்தோங்கியிருந்தது. பிற நாட்டுச் சரக்குகள், கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. உண்மையான ஒப்பரவு (சமரசம்) தமிழனிடையே நிலவிற்று. ஆனால் அவன் ஒப்பரவு இக்காலத் தன்னிலை கெட்ட அடிமை ஒப்பரவு அல்ல. தற்பண்பு ஒழிப்பு மன்று, 'பிறர் தம் மத மேற்கொண்டு களையவே' என்ற நிலையிலுள்ள ஒப்புரவே. பிற நாடுகளின்மீது இன்றைய உவத்தலும் அவனுக்கில்லை; இன்றைய காய்தலும் அவனுக்கில்லை. அவன் ஆரியம் நன்று என்று கூறுவான்; ஆயின் தமிழ் இனிது என்பான். ஆரியப் பசப்புக்கும் கால் பிடிப்புக்கும் போகான்; பழிப்புக்கோ வேண்டுதல் ஏற்படவில்லை.
பிற்காலத் தமிழன் பிறமொழிப் பற்றால் தன் மொழி மீது கொண்ட நாணத்தை மறைத்தான்; பிறமொழி அறிவால் தன் மொழியறிவின்மையை மறைத்தான். பிறமொழி நடை, பிற மொழி எண்ணம், பிறமொழிப் பற்று மிகுந்தன. முற்காலத் தமிழனைப் போல் மனிதனுடன் மனிதன் என்ற முறையில் பிறருடன் ஊடாடாமல், நண்பனுடன் நண்பன் என்ற முறையில் கைகோத்த தோழமை கொள்ளாமல், நாயினம்போல் பசப்பித் தோழமையின் பேரால் அடிமையை வளர்த்தான். இதனாலேயே தான் உழைத்தும் உண்ணாது, தான் நெய்தும் உடுக்காது, தான் ஈட்டிய செல்வத்தைப் பிறர் காலடியில் வைத்துப் புழுக்கையும் இரவலனும் ஆனான்! தான் எடுத்த கோயிலில் தானே புக முடியாதவனாய், தான் வணங்கும் கடவுளுக்கே தான் அயலானாய் மாற்றானாய் அண்டமாட்டாதவனானான். தன்மொழி தனக்கு அயலாயிற்று; தன் இலக்கியமே தன்னைப் பழித்தது. அவனுக்குத் தன் நாடே பகை நாடாய், தன் விடுதலையே தனக்கு விலங்காயிற்று. ஆனால் இவ்வளவினும் மொழி மட்டும் அவனை விடவில்லை. அவன் மொழி எது வாயினும் சரி, அது தூய திராவிடமான தமிழாயினும் சரி, தூய்மையற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடமாயினும் சரி, திராவிடக் கலப்பு ஏற்பட்டு விட்ட வடநாட்டுத் தாய்மொழிகளாயினும் சரி, எல்லாம் படிப்படியாகத் தாழ்ந்த மொழிகளே. வேண்டுமானால் தூய திராவிடமாகிய தமிழினும் இத் தூய்மையால் கெடாத பிற மொழிகள் உயர்வாகலாம். ஆனால் திராவிட வாடை படாததென்ற பெருமைக்கு இலக்கான வடமொழியாகிய தெய்வ மொழியை