பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

27

கம்பராமாணயம் முதலிய நூல்கள் காலத்திற்கும் பிற்பட்ட காலத்திற்கும் உரிய இலக்கியத்தின் இயல்பேயன்றிச் சங்க கால இலக்கியத்தின் இயல்பு அன்று! பழந்தமிழ் இலக்கியம், தற்கால மேலை நாட்டிலக்கியத்தினும் வாய்மையும் இயற்கையுடனொத்த சிறப்பும் பொருந்திய தென்பதை அதனை மேற்போக்காகக் கற்பவரும் காணாதிரார்.

ரு

இன்று நாம் சங்க இலக்கியம் என்ற பெயரால் உணரும் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற வகைகளுக்குட்பட்ட தொகை நூல்களேயாகும். இவற்றுள் தமிழர் பொதுமறைகளான திருக்குறளும் நாலடியும் அடங்கும். அகச் சான்று புறச்சான்றுகளுதவியால் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு தமிழ்க் காப்பியங்களும் இக் காலத்தவையே என்று கூறலாகும். இந் நூல்கள் எழுவதற்குக் காரணமான சங்கத்தை தமிழ் மரபு, கடைச்சங்கம் என்று கூறுகின்றது. இச் சங்கத்துக்கு முன்பே தலைச்சங்கம், இடைச்சங்கம் என இரு சங்கங்கள் இருந்தன என்று இறையனார் அகப்பொருள் என்ற நூலின் உரை கூறும். பிற உரையாசிரியர்களும் இக் கூற்றை ஏற்று அதன்வழி நின்றனர். அண்மையில் குமரிநாடு முதலிய தென் கடற்பகுதிகளின் வாய் மையை ஐயுறுவோர், இச் சங்க வாழ்வையும் ஐயுறவும் மறுக்கவும் செய்வதுண்டு. ஆயினும் தமிழ் மரபுக்கும் ஒருசார்பற்ற ஆராய்ச்சிக்கும் ஒத்த முடிவுகள் இவ் விரண்டையும் வலியுறுத்துபவையே யாகும். கடைச்சங்கம் இருந்ததாகக் கூறப்படுவது பாண்டியன் பின்நாளைய தலைநகரமாகிய மதுரையிலேயே. வரலாற்றுக் காலங்களிலேயே மதுரைக்கு முற்பட்டுக் கொற்கை, பாண்டியன் தலைநகராயிருந் ததாக அறிகிறோம். கொற்கைக்கு முற்பட்ட தலைநகர் மணலூர் என்றும், அதனினும் முற்பட்டு இடைச்சங்க காலத்தில் கபாட புரமும், தலைச்சங்க காலத்தில் குமரிக் கரையிலுள்ள தென் மதுரையும் தலைநகர்களாகவிருந்தனவென்று உரையாசிரியர்கள் குறிக்கின்றனர். இக்கூற்றுக்களுடன் வடமொழி பாரதராமாயண நூல் குறிப்புக்கள் முற்றிலும் பொருத்த முடையவையாயிருக் கின்றன. பாரதத்தில் பாண்டியன் தலைநகர் மணலூர் (மணவூர்) என்றும், இராமாயணத்தில் அவன் தலைநகர் கபாடபுரம் என்று கூறப்படுகின்றது.