9. திராவிடமும் இந்திய பெருநிலப்பரப்பும்
உலகின் நாகரிக வளர்ச்சியில் ஓரிரண்டாயிரம் ஆண்டு களாகத் தமிழ் பெரிதும் தனித்துப் பிரிந்து நின்றே வருகிறது. இத் தனி வாழ்வின் காரணமாக இக் காலத்திற்குள்ளேயே பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியான மலையாள நாடும் அதன் மொழியும் தனி மொழியாகவும் நாடாகவும் பிரிந்தன. வரலாற்றிற்கு முந்திய (தொல்காப்பியத்துக்கு முற்பட்ட) காலத்தில் இதுபோலவே வேறு நாடுகளும் பிரிந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமில்லாமலில்லை. ஏனெனில் கன்னடம், துளு, குடகம் முதலிய மொழிகளும் தெலுங்கு மொழியும் இன்று தனி மொழிகளாயினும், தமிழுடன் மிக நெருங்கிய தொடர்புடைய மொழிகள் என்பதைக் கால்டுவெல் முதலிய ஆராய்ச்சியாளர் நிலைநாட்டியுள்ளனர். இவற்றில் பெருவரவாகப் புகுந்த வடசொற்கள் இவையனைத்திற்கும், வட நாட்டுத் தாய்மொழி களுக்கு, வடமொழிக்கும் பொதுவானவை, ஆதலால் அவை இம்மொழிகளுக்கு (திராவிட) உரியவை என்பது தெளிவு. அச் சொற்கள் நீக்கி அம்மொழியின் தனிச்சொற்களை ஆராய்ந்தால் அவை அனைத்தும் தமிழின் வேர்ச் சொற்களுடனும் (முதற்பகுதி களுடனும்) இலக்கண அமைதிகளுடனும் பெரிதும் ஒத்திருப்பது காணலாம். இவ் வொற்றுமையால் இவையனைத்தும் தமிழின் திரிபுகள் என்று கொள்வது சற்று மிகைபட்ட விரைந்த முடிபு ஆகும் என்பது உண்மையாயினும், இவையனைத்தும் ஒரே மூலமொழியின் திரிபுகள் என்று கொள்வது பொருத்தமுடைய தென்பதில் ஐயமில்லை. இவை யனைத்தையும் சேர்த்து ஒருங்கே குறிக்க இப்போது 'திராவிட' என்ற சொல் வழங்கப்படுகிறது.
வடமொழி வழக்கில் திராவிடம் என்ற சொல் தனிப்படத் தமிழைக் குறிக்கவே வழங்கிய சொல் ஆகும். சிவஞான முனிவர்,