30
அப்பாத்துரையம் - 1
சிவஞான போதத்துக்கு எழுதிய தமிழ்ப் பேருரை திராவிட மாபாடியம் (த்ராவிட மஹா பாஷ்யம்) என்றும், ஆழ்வார்கள் நாலாயிரமும் தேவார திருவாசகமும் முறையே திருமால் நெறி யினராலும், சிவநெறியினராலும் திராவிட வேதம் என்றும் கூறப்படுதல் காண்க. இதுபோல் மலையாளம் கேரளம் என்றும், கன்னடம் கர்நாடகம் என்றும், தெலுங்கு ஆந்திரம் என்றும் வழங்கும். ஆயிரம் ஆண்டுகட்கு முன் தன்னாட்டு மொழிகளைப் பற்றிக் கூறிய வடமொழி அறிஞரான குமாரில் பட்டர் தென்னாட்டு மொழிகளாகத் திராவிட ஆந்திரம் என்ற இரண்டு மொழிகளையே குறிக்கிறார். இதிலிருந்து அக்காலத்தில் மலையாளம் கன்னடம் முதலிய மொழிகள் தனி மொழிகளாகப் பிரியாது கொடுந்தமிழ் நிலையிலேயே இருந்தனவென்று காணலாம். முற்கால கன்னட (பழ அல்லது ஹள கன்னட) நூல்களும், முற்கால மலையாள (பச்ச மலையாள) நூல்களும் இதற்கேற்ப வட எழுத்துக் கூட எழாத தமிழ் நடையிலேயே எழுதப்பட்டிருந்தன. கால்டுவெல் முதலிய மொழி நூலாராய்ச்சி யாளரும் மலையாளம் கன்னடம் துளுவம் குடகம் முதலிய மொழிகள் தெலுங்கைவிடத் தமிழையே பெரிதும் ஒத்திருந்ததால், அவை திராவிட இனத்தில் தமிழ்க்குழுவைச் சார்ந்தவை என்றே கூறுகிறார்கள்.
திராவிட இனமொழிகளுள் தமிழினின்று நெடுந்தொலை பிரிந்து விட்ட மொழி தெலுங்கேயாகும். தற்கால வடமொழி அடிமைப் பற்றின் காரணமாகப் பலர் தெலுங்கை வடமெழிச் சிதைவென்று கூடச் சாதிக்க முயன்றனர். அறிவியலூழியாகிய இந்நாளில் இது கானல் நீரென உருக்குலைந்து போயிற்று. மேலும் தெலுங்கு நாட்டுக்கும் அப்பால் வங்க நாட்டிலும், நடு இந்திய மாவட்டத்திலும் உள்ள திருந்தாத் திராவிட இன மொழிகள், தெலுங்கை விடத் தமிழையே பெரிதும் ஒத்திருக்கின்றன. வட மேற்கிந்தியாவிலுள்ள பலூச்சி மொழியும் இவ்வாறே. எனவே மொழியாராய்ச்சி முன்னேற முன்னேற, திராவிடமொழிகளுள் தமிழ் நீங்கலாக மற்ற எல்லா மொழிகளை யும்விடப் பழமை மிக்கதாகத் தெரியவருகின்ற இத் தெலுங்கும், மிகத் தொன்மையான (தொல்காப்பியத்துக்கும் முந்திய) காலத்தில் தமிழினின்று பிரிந்து தனிப்பட வளர்ச்சியுற்றுத்