வருங்காலத் தமிழகம்
39
கூறப் பலர் தயங்கினும், தாய்மைப் பண்பு மிக்க மூத்த மொழி என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை. இந்தியப் பெருநிலப் பரப்பெங்கும் பரந்து கிடக்கும் திராவிடப் பண்படா மொழிகளுடன் ஒப்பிட்டு நோக்குபவர்களுக்கு அது திராவிடத் தாய்மொழிக்கு மிக்க அண்மை நிலை உடையதென்பது விளங்கும். மேலும் திராவிடம் மட்டிலுமன்றி இந்திய மொழிகளிலும் தமிழ் தொன்மை மிக்க மொழி அதன் பொதுப் பண்பினை இந்திய மொழிகள் அனைத்தின் வளர்ச்சி முறையிலும் வடமொழி வளர்ச்சியிலும்கூடக் காணலாம். சில இடங்களில் இந்தியாவுக்கு வெளியிலுள்ள பிற ஆரிய மொழி களுடனும், ஆரியமல்லாப் பிற இன மொழிகளுடனும் அது கொண்டுள்ள உறவைக் கண்டு கால்டுவெல் போன்ற பேராராய்ச்சியாளர் உலகின் முதன் மொழிக்கும் அது அண்மையுடையதென்றும், பல மொழிகளுக்கு மட்டுமன்றிப் பல இனம் தாய்மொழிகளுக்கும் அது பாலமாயமையத்தக்கதென்றும் கூறுகின்றனர்.
நான்காவதாக இந்திய சமயத்துறையின் அடிப்படைக் கருத்துக்களையும், இந்திய நாகரிகத்தின் வித்துக்களையும் தமிழ், தமிழக, தமிழ்ப் பண்பாட்டாராய்ச்சி மூலமே காணலாகும். இத்தனை வகையிலும் தொன்மொழி என்ற முறையிலும், தற்கால மொழி என்ற வகையிலும் தனிப்பெருமை உடைய தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி எனவும், முதன்மொழி எனவும் கொள்ளாதது வியப்புக்கிடமான செய்தியேயாகும். தமிழர் இன்றைய அடிமை நிலையே உலக மக்கள் இம் மொழியின் தகுதியை ஏற்க முடியாது போனதற்குக் காரணம் என்று கூறலால் வடமொழி போல் தமிழ் இறந்த மொழியா யிருந்தால்கூடஅது இன்று ஒருவேளை உலகின் தொன்மொழிகளுள் இடம் பெற்றிருக்கக் கூடும். தமிழர் இறந்தவருடனும் எண்ணப் படாது வாழ்பவருடனும் எண்ணப்படாத நிலையிலிருப்பதனால் போலும், தமிழ் இறந்த மொழிகளுள்ளும் உரிய இடம் பெறாது, வாழு மொழிகளுள்ளும் இடம் பெறாது இரண்டுங் கெட்டான் நிலையில் நிற்க நேர்ந்தது!
தமிழர் இறந்தகாலப் பெருமையை மக்கள் உணரத் தடையாயிருப்பது, அவர்கள் நிகழ்கால இழிநிலையே.