12. தமிழன் குறைபாடுகள் - இடைக்காலம்
தமிழ்மொழி, தமிழிலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் குறைகளைத் தமிழர் யாவரும், சிறப்பாக வருங்காலத் தமிழகத்தின் படைப்பாளர்களான தமிழிளைஞர்கள், தமிழ் நங்கையர்கள் அறிதல் இன்றியமையாதது. இக் குறைகளை மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். ஒன்று இடைக்காலத்தில் அதன் வளர்ச்சி குன்றி நலிந்த வகைகள், அவற்றுக்குக் காரணமாயிருந்த உள்ளார்ந்த வழுக்கள், அந் நலிவால் ஏற்பட்ட பயன்கள் ஆகியவை. இரண்டாவது, உலக நாகரிகப் போக்கில் தமிழன் பின்னடைந்துவிட்ட பகுதிகள். மூன்றாவது தமிழர் இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளும் சூழ்நிலைகளும் ஆகும்.
முதன் முதலாக இடைக்காலக் குறைபாடுகளை எடுத்துக் கொள்வோம். புதுச்சமய வரவு காரணமாகவோ இக்கால நூல்களில் பழமை சொல்லளவில் பேணப்பட்டது. ஆனால் பழந்தமிழன் பெருமையையோ பண்பாட்டு உயர்வையோ இக் காலத்தவர் உணரவில்லை. உணர்ந்த விடத்தும் அதனை மதிக்கவில்லை. அரசியல் மாறுபாட்டின் காரணமாகவோ அவர்கள் ஆராய்ந்து நோக்காது, தம் மொழியினும் பிற மொழி உயர்வுடையதெனக் கொண்டு படிப்படியாகப் பிற மொழி நாகரிகத்தையும் பண்பாட்டையுமே தமதாக மதித்து அப்போலிப் பழமை மீது தம் போலி வாழ்வை வளர்க்க முனைந்தனர். எனவே இக் காலக் குறைபாட்டைச் சுருக்கமாகக் குறிப்பிட்டால் தற்பண்பு உணராமை எனக் கூறலாம்.
இதன் வழியாகப் பிற பல குறைபாடுகள் ஏற்பட்டன. அவர்கள் பின்பற்றிய அயல் பண்பு உண்மையில் வட நாட்டுத் திராவிடப் பண்பின் வளர்ச்சியே ஆயினும், அது நாகரிகப் பண்பாட்டில் மிகவும் தாழ்ந்த ஆரியப் பூச்சினால் வளர்ச்சியற்று உழலும் போலி வளர்ச்சியாதலின், அதன் வாயிலாக