42 ||
—
அப்பாத்துரையம் 1
வடநாட்டை முதலில் பிடித்த சனியன் இங்கும் வந்து தமிழையும் பிடித்தது! பாரதம் நான்கு தடவை மொழி பெயர்த்துப் பாடப்பட்டது. இராமாயணம் இருமுறை பாடப்பட்டது. புராணங்கள் எண்ணற்றவை. ஒரு சில நூல்கள் நீங்கலாக இக்கால நூல்களுள் ஒன்றேனும் நிகழ்கால நிலை பற்றியதோ எதிர்காலப் போக்குடையதோ வாழ்க்கைத் தொடர்புடையதோ அன்று. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் தமிழ் மொழி இலக்கியத்தின் வளர்ச்சி இந் நிலையி லேயே இருந்தது.
இன்னும் புதுமைப் பூச்சுப் பூசித்திரியும் பல புதிய எழுந் தாளர்கள் இவ்வாட்டு மந்தை உணர்ச்சியுடன் எழுதுகின்றனர்; அல்லது புதிய உருவையோ உடலையோ ஏற்றும் அதன் மூலமாகப் பழமை பேணவே விளம்பரவேலை செய்கின்றனர். இவர்கள் வாழ்வியல் (சமூக) எழுத்தாளர்கள் போல் எழுதுவர்; அதனிடையே புராண மேற்கோள், புராண உவமைகள், பழைய மூடப் பழக்க வழக்கங்களுக்கான சப்பைக்கட்டுகள், சூழ்ச்சிகள் முதலியவை நெளியும். இலக்கியத் தமிழ் எழுதுவர், ஆனால் அதனிடையே வழங்காப் பிறமொழிச் சொல்லுக்கு வழக்கு உண்டுபண்ணுவர். எளிய தமிழ் நடையைப் புகழ்வர்; கொச்சைச் சொற்களையும் வழங்குவர்; அதனிடையே புதிய புரியாய் பிறமொழிச் சொற்கள் செருகப்படும். தமிழ் அகரவரிசை, தமிழ் நூலுரை, தமிழ் மாணவர் செய்யுட் பாடங்களுக்கு உரை ஆகியவை எழுதுவர்; ஆனால் ஆங்காங்கே தமிழ்ச்சொல்லை எப்படியாவது பிறமொழிச் சொல் எனக் காட்ட அவர்கள் மெய்யும் கையும் தினவெடுப்பதைக் காணலாம். அவர்கள் வாழ்வில் கடவுள் நம்பிக்கைத் தேடிப் பார்த்தாலும் காணாது; துறவும் காணப்படாது. ஆனால் அவர்கள் கலையில், வாணிகத்தில் கடவுளுக்காகப் பாடுபடுவர், தம்நலம் பேணிப் பிறருக்குத் துறவுநிலை கற்பிப்பர். இத்தகைய போலி வளர்ச்சி பழந்தமிழருக்கு மாறுபாடானது மட்டுமன்று, எதிர்காலத் தமிழக வாழ்வுக்கும் பெரிதும் ஊறு செய்வதாகும்.