14. தற்காலச் சீர்குலைவு
தமிழ்நாட்டின் இப்பழைய வரன்முறைக் குறைகளேயன்றித் தற்காலச் சூழலிற்பட்டகுறைகளும் பல. தமிழன் இன்று முன்னேற வேண்டும் என்று எண்ணினாலும் முன்னேறுவது எளிதல்ல. அவன் சுமக்கும் அடிமைச் சுமை அவ்வளவு! அடிமையாக மாடுகள்போல் விற்கப்பட்டவர்களான நீக்ரோவர்களாக உடலடிமைகள் மட்டுமே, வெள்ளையன் தன்னைத் தெய்வப் பிறவி என்று கருதி அவனை அடக்கினாலும், அவன் தன்னை விலங்குப் பிறவி என்று கருதுவதில்லை. தன் அடிமைத்தன்மை தன் வலியின்மையால், காலக் கேட்டால் வந்தது என்று மட்டும் அவன் எண்ணுவான். காலமாறு பாட்டில் நம்பிக்கை கொண்டு ‘ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்' என்று எண்ணித் தன்னை வலிமைப்படுத்திக் கொள்வான். இதன் பயனாக அவன் உடலடிமைத்தனம்கூட மாறி வருகிறது. ஆனால் தமிழன் இன்று அரசியல், சமயம், வாழ்வியல், பொருள் நிலை ஆகிய எல்லாத் துறையிலும் அடிமை; அது மட்டுமன்று; வெளிநாட்டார்க்கும் அடிமை, அயல் நாட்டார்க்கும் அடிமை, தன் நாட்டிலும் சிலர்க்கு அடிமை, சிலரை அடிமை கொள்ளும் கூலி அடிமை. அது மட்டுமா? நீக்ரோ அடிமை தன் பகைவனை வெறுத்து மனத்திலாவது எதிர்ப்பான். தமிழன் தன்னைச் சுரண்டுபவனைத் தன் தாய், தன் தந்தை, தன்னை ஆட்கொள்ளும் வள்ளல் எனக் கூறி மகிழ்வுடன் தன்மீது உதைப்பவன் காலை அணைக்கிறான். தான் இழிந்த பிறப்பு என்பதை ஒப்புக்கொள்கிறான்.
தமிழரிடையே பல விடுதலைப் போர்கள், இயக்கங்கள் நடந்துள்ளன; நடக்கின்றன. ஆனால் அவற்றின் தலைவர்கள் கூடிய மட்டும் தமிழுக்கும் தமிழர்க்கும் புறம்பானவர்களாகவே இருத்தல் வேண்டும் என்ற ஒரு ஒழுங்கு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமன்று. அவன் பாடுபட்டு நாடும் விடுதலையும் ஒரு புதுமையான விடுதலையே. அடிமை ஒழிப்பே மற்றவர்களுக்கு