1. வளரும் தமிழ்
தமிழ் மொழியை வண்டமிழ், தண்டமிழ், கன்னித் தமிழ், கன்னித் தாய்த் தமிழ், மூவா முதன்மொழி எனத் தமிழ்க் கவிஞர் சிறப்பிப்பதுண்டு. இக் கூற்றுகளைக் கவிஞர் புனைந்துரை என்றோ, தாய்மொழிப் பற்றின் ஆர்வ உரைகள் என்றோ கூறிவிடத்தோன்றும். புராண மரபுக் கூற்று என்று கூறிவிடக்கூட டமில்லாமலில்லை. ஏனெனில், தமிழிலும் புராணங்கள் உண்டு. இக் கூற்றும் புராணங்களிலேயே மிகுதியும் காணப்படுகிறது.
ஆயினும், இக் கூற்று முழுதும் கவிதைப் புனைவோ, ஆர்வப் புனைந் துரையோ, புராண உரையோ அன்று, ஏனெனில், சமற்கிருத மொழியிலும் பிற மொழிகளிலும் புராணங்கள் எழுதியவர் இதே புனைந்துரையை அம் மொழிகளுக்குச் சார்த்தவில்லை. மொழிக்கு அதைச் சார்த்த முடியாமை யறிந்தே அவர்கள் இதே புனைந்துரையைத் தம் சமயத்துக்கும் (சனாதன தர்மம்-என்று முள்ள சமயம்), நாட்டுக்கும் (புராதன பாரதம்) உரிமைப்படுத்தினர். மொழி யெல்லை கடந்து நாட்டிலும் சமயத்திலும் மட்டும் அப்பண்பு மாநிலத்தில் பரவியிருந்தது.
தமிழின் இப்புராண மரபின் மூலத்தைப் புராண காலத்துக்கு முற்பட்ட இலக்கியக் காலம், சங்க காலங்களில் காணலாம்.
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருள் இலக்கியக்கால முழுவதிலும் வழங்கியுள்ளது.
தமிழ் என்பதற்கு 'அறிவு' என்ற பொருள் இன்னும் பழைமையானது. 'தமிழறிவோர்’, 'நூலோர்' என்ற வழக்குகள் ‘ஆய்ந்துணர்ந்த அறிவுடைய பெரியோர்' என்ற பொருளில் நீதி நூல்களில் வழங்கியுள்ளது.