அய்யமில்லை.கண்ணில்லாமல் அவர்கள் கண்டதை,காலில்லாமல் அவர்கள் ஓடியதை, கண்ணுடனும் காலுடனும் நாம் காண முடியாது. ஓடமுடியாது!
முதலில் அவர்கள் அடைந்த முன்னேற்றத்தையே இன்று நாம் அறிவதில்லை!
சங்க காலத்தில் கிட்டத்தட்ட தமிழர் அனைவரும், அன்று தமிழராகவே இருந்த மலையாளிகளும், கன்னடியரும், தெலுங்கரும் உட்படக் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு பேராக- ஆடவரும் பெண்டிரும்-எழுத வாசிக்கப் படித்திருந்தனர். கண்ணைத் திறந்து-மரத்தால் செய்யப்பட்ட ஆரியக் கண்ணாடியோ, மேலை நாட்டுக் கண்ணாடியோ போட்டுக் கொள்ளாமல்-சங்க இலக்கியத்தின் பக்கம் பார்வையைத் திருப்புபவர்களுக்கு இது தென்படாமல் போகாது. யார் யாரெல்லாம் புலவராகியுள்ளார்கள்-தொகுப்பு நூல்களின், திரட்டுகளில் இடம்பெறும் அளவுக்கு அவர்களுள் எத்தனை பேர்-எத்தனை வகுப்பினர்-தொழிலினர்-ஊரினர்-நாட்டினர்- கல்வி ஒளிபெற்றிருக்கிறார்கள் என்று கண்டால், அது இன்று நாம் நம்பக் கூடிய ஒரு செய்தியாயில்லை! மேனாட்டினர் கூட இதை அறிந்தால் எளிதில் நம்பமாட்டார்கள்-ஏனெனில், அது அவர்கள் இன்றும் கனவு காணாத ஒன்று!
இன்றைய அமெரிக்காவும், இரஷ்யாவும், பிரிட்டனும் கண்டு பொறாமைப் படத் தக்க கல்வி வளர்ச்சி, பகுத்தறிவுப் பண்பு, சங்க இலக்கியத்தில் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ளவர் களிடம்கூட இருந்தது!
நம்ப முடியாத இம் முன்னேற்றங்களுக்குரிய நம்ப முடியாத கருவிகள் யாவை?
முத்தமிழ்! பொது மக்களிடம் கல்வி பரப்புவதற்காக மிகப் பழங் காலத்திலேயே தமிழர் கண்டுபிடித்த-உலகு இன்றும்- காணாத ஒரு கருவி!
முச்சங்கம்! அது இக்காலச் சங்கங்களுள் ஒன்று என்று கூடப் பலர் நம்பத் தயங்குகின்றனர். ஆனால், அது நாம் கொள்ளும் பொருளிலுள்ள சங்கம் அன்று. ஏனெனில்,அது உலகில் எந்நாடும் இன்றுவரை கண்டிராத, கேட்டிராத, எண்ணிப்