பார்த்திராத முழு நிறை தேசியச் சங்கம்-அதுவே இலக்கியம் ஆக்க, திரட்ட, தொகுக்க, தணிக்கை செய்ய, சான்றளிக்க, பிரச்சாரம் செய்ய, இலக்கியப் புகழ் பரப்ப அமைந்த தமிழுலகின் ஒரே அமைப்பு. மூவரசரையும் திறை கொண்ட ஒரே பாவரசர் செல்வம்!
கல்லூரி, பல்கலைக் கழகம் போன்ற நாட்டுக் கல்வி நிலையங்கள், கலை நிலையங்களின் நடு இணைப்பான, பல்கலைக்கழகக் கூட்டுறவு அமைப்பு அதுவே! பள்ளிகளாகிய பரந்து சிதறிய வேர்த்துய்களை ஒருபுறமும், உலக வாழ்வாகிய உச்சிக்கொடியை ஒருபுறமுமாக, ஒவ்வொரு தமிழர் வாழ்வுடனும் அக்கால உலக நாகரிக வாழ்வை இணைத்த அரசியல் சாராத அரசியல் பேரமைப்பு மரம் அது!
4.சங்ககால வாழ்வுக்கு ஆதாரம் அதன் செல்வவளம். அச் செல்வ வளத்துக்கு ஆதாரம் அதன் தொழில் வளம், வாணிக வளம், கடல் வளம், கடல் வாணிக வளம், சுரங்க வளம், காட்டு வளம்! இத்தனைக்கும் ஆதாரம் அது கண்ட-இன்று நாம் அயல் மரபாகக் கருதும்-அறிவு நூல் வளம்! இந்த அறிவு நூல் வளத்துக்கு ஆதாரம்-இன்றைய தமிழர் இதைக் காதில் கொள்ளுமுன் தங்கள் காதுகளைத் 'தயார்' செய்து கொள்ளுதல் வேண்டும்-இத்தனைக்கும் ஆதாரம், தமிழர் சமய அறிவொளி!
'தமிழர் சமய அறிவொளி' என்றவுடன் சமயவாணர் கிளர்ச்சியுறக் கூடும். சீர்திருத்த வாதிகள் சீற்றமடையக் கூடும். ஆனால், அதன் உண்மை கண்டால் இருவருமே பெருமைப் படுதல் வேண்டும். ஆத்திகர் போற்றும் ஒரு நாத்திகர் சான்றே அதற்கு உண்டு-இங்கும் தேசிய முதல்வர் பண்டித நேரு சான்றே அதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் பண்டை இந்தியா பற்றிக் கூறும் சான்று அது - தமிழகத்துக்கு அது முற்றிலும் பொருந்தும்!
இந்தியாவின் மிகப் பழைமையான சமய நூல்களில் கூட நாத்திகம்-நாத்திகத்தின் பல்வேறு வகைகள்-கண்டிக்கப்படுகின்றன. உலோகாயதம், சூனிய வாதம், கணவாதம், அணுவாதம், சாங்கியவாதம், நியாயவாதம்-இத்தனை நாத்திக நெறிகள் கண்டிக்கப்படுகின்றன-சுட்டிக் காட்டி, விளக்கப்பட்டு, வரிவரி யாக மறுக்கப்படுகின்றன!