பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளுக்குள் மறைந்த தேசிய ஒளிப்பண்பு நம் இடைக்காலச் சமயப் புகைக்குள் மின்னும் அறிவுப்பொறி அதுவே.

சில சித்தர் நூல்கள் தமிழில் கண்ணாடித்தாள் பொதிந்து நமக்கு வந்து எட்டியுள்ளன. ஒரு பெருஞ்சித்தர்-புதியதோர் ஆத்திகமே வகுத்துக் கொடுத்த சித்தர்-திருவள்ளுவரின் திருக்குறள்-அப்பழங்கால உலகு வருங்கால உலகுக்கு நம் கால உலகாகிய அஞ்சல் துறைமூலம் அனுப்பும் பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் சிப்பமாக (Registered Parcel) நம் தமிழக அஞ்சல் சேவகர் கையில் இருக்கிறது!

இந்தியாவின் பேரருளாளர்-மேல் நாட்டு டால்ஸ்டாய், ரோமேன் ரோலண்டு முதலியோர்-அருள்மரபின் மூல முதல்வர் அவரே என்று ஜெர்மன் அறிஞர் ஆல்ஃபிரட் ஷ்வைட்ஸர் உணர்ந்து குறிப்பிடுகிறார்.

காந்தியார் மரபை ஈன்று மறந்தது தமிழகம்-அவர் உடலை ஈன்று மறந்தது குஜராத்து-உடல் கொன்று மறந்தது மராட்டியம்- மரபும் உடலும் ஈனாமல் - கொலையிலும் மறதியிலும் பங்கு கொள்ளாமல்-உலகில் அறிவுச் செல்வரை ஒருபுறமும் அறிவு வீரரை மற்றொருபுறமும், பெற்றுப் பெருக்கும் அறிவரக்க நாடாகிய ஜெர்மனி-தான் பெறாத ஷேக்ஸ்பியரை, தான் ஈனாத காளிதாசனை உலகுக்குணர்த்திய விசித்திரப் பிறவியான ஜெர்மனி-இதோ, இத் திருவள்ளுவரையும் உலக அரங்குக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது!

கோமாளிகளைக் கண்டு சிரிக்கும் உலகம், அயலாடை, அயற்பண்புகள்-பழைமையுருவில் வந்தாலும், புதுமையுருவில் வந்தாலும்-ஒருங்கே போற்றும் தமிழகம், திரையில் ஒளிநிழல் கண்டு, திரையே ஒளி என நம்பிப் போற்றும் இந்தியா- ஜெர்மனியின் இப் புத்தொளியை எப்படி வரவேற்குமென்று பொறுத்துப் பார்ப்போம்!