குடியாட்சி
113
இம்மேலவை வேண்டியதில்லை யென்று கைவிடப்பட்டுக்கூட வருகின்றது.
குடியேற்ற நாடுகளுள் முதன் முதல் குடியேற்ற நாட்டு அரசியலுரிமை பெற்றது கானடாவாகும். அது 1867-ஆம் ஆண்டுச் சட்டப்படி கூட்டுறவு அரசியலாயிற்று. நியூபவுண்ட்லந்து என்ற தீவு கானடாவுக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறது. ஆயினும் அது கானடாக் கூட்டுறவுடன் சேராமல் தனி அரசியலாகவே இன்னும் இயங்குகிறது.கானடாவையடுத்து ஆஸ்ட்ரேலியா 1909-
லும் தென் ஆபிரிக்கா 1909-இலும் கூட்டுறவுகளாயின. நியூபவுண்ட்டுலந்து கானடாவுடன் சேராமல் தனித்து நின்றது போலவே நியூசிலந்து என்ற தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியக் கூட்டுறவுடன் சேராமல் தனி அரசியலாக நிலவுகிறது.
இக் குடியேற்ற நாட்டின் அரசியல் முறை பெரிதும் அமெரிக்க அரசியல் முறையைப் பின்பற்றியே கூட்டுறவு முறையில் அமைந்துள்ளன. ஆயினும் அமெரிக்க அரசியலுக்குச் சிறப்பான பண்பு கூட்டுறவு அரசியலைவிட உறுப்புக்களான தனி அரசியல்களுக்கு மிகுதி உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன என்பதே. உண்மையில் கூட்டுறவு அரசியலின் உரிமைகள் மட்டிலுமே வரையறுக்கப்பட்டு அவைபோக மீந்த உரிமை களனைத்தும் வரையறையில்லாமல் தனி அரசியல்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. குடியேற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்று மட்டும் அமெரிக்காவின் நிலைமையை முற்றிலும் பின்பற்றியது. அங்கும் வரவர மேல் அரசியலின் உரிமைகளையே வலியுறுத்தும் போக்குக் காணப்படுகிறது. கானடாவிலோ தனி அரசியல்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. மீந்த உரிமைகள் அனைத்தும் கூட்டுறவையே சார்ந்தவை. தென் ஆபிரிக்காவில் அரசியல் பெயரளவில்தான் கூட்டுறவு அரசியல். உண்மையான உரிமைகள் பெரிதும் மேலரசியலையே சார்ந்துள்ளன. தனியரசியல்கள் பெரும்பாலும் மாவட்ட தன்னாட்சி அளவிலேயே நிலைபெறுகின்றன.
மேலவைகள் பற்றியமட்டில் கானடாவில் கூட்டுறவு அரசியலில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதேயில்லை. முதல் அமைச்சரைக் கலந்துகொண்டு ஆட்சி முதல்வர் (கவர்னர் ஜெனரல்) வாழ்நாள் எல்லைக்கு உறுப்பினரை அமர்த்திக்