114 ||.
அப்பாத்துரையம் – 10
கொள்கின்றனர். பொதுப்படக் கானடாவின் மேலவை அரசியல் வலிமை குன்றியதாக இருந்து வருவதால் அதனை உரப்படுத்தும் வகையில் சீர்த்திருத்தங்கள் செய்யவேண்டுமென்று முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனி அரசியல்களில் குவபெக், நோவாட்கோஷியா ஆகிய இரண்டுக்கு மட்டுமே மேலவைகள் உண்டு. மற்றவற்றுக்கு இல்லை. ஆஸ்திரேலியாவில் மேலவை உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களிலும் சற்று உயர்ந்த தேர்தல் வரையறையுடன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தனி அரசியல்களில் இரண்டில் உறுப்பினர் கானடாக் கூட்டுறவு அரசியலைப் பின்பற்றி வாழ்நாள் எல்லை முழுமைக்கும் அமர்த்தப்படுகின்றனர். மற்ற நான்கிலும் ஆஸ்திரேலியக் கூட்டுறவைப் போலவே அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தென் ஆபிரிக்காவில் மேலவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் படுவதுடன் மக்கள் தொகையளவுக்கேற்ற விழுக்காட்டில் தேர்ந்தெடுக்கப்படவும் முயற்சிகள் செய்யப்படுகின்றனர். இதன் பயனாக இந்நாட்டில் அரசியலில் வேறெங்குமில்லாப் புது நிலைமை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மற்றெல்லா நாடுகளிலும் கீழவை பெரும்பாலும் வெறித்த முற்போக்குடையதாயிருக்க, இவ்வொரு கூட்டுறவில் மட்டும் மேலவை கீழவையை விடக்கூட முற்போக்கும் புரட்சி மனப்பான்மையுமுடையதாயிருக்கிறது.
கட்சிப் போக்குகளை உற்று நோக்கினாலும் தாய்நாட்டிற்கும் குடியேற்றங்களுக்கும் ஒரு தெளிவான வேறுபாடு காணப்படும். பிரிட்டனில் மூன்று கட்சிகளும் மாறி மாறி வளர்ந்தும் நலிந்தும் அரசியல் கவறாட்டமாடி வரினும், பெரும்பாலும் அவற்றுள் முதன்மை நிலையிலிருந்து வருவது பழய நிலவுடைமையும் பிறப்புரிமையும் செல்வாக்கும் உடைய வகுப்புகளின் மரபில் வந்த கன்சர்வேட்டிவ் கட்சியே. அடுத்த படியாகக் குடியாட்டிசியில் முற்போக்குடைய லிபரல் கட்சியும் அண்டைக் காலங்களில் தொழிற்கட்சியும் முன் வந்துள்ளது. உண்மையில் இக் கடைசிக் கட்சி தனிப்பட அரசாங்கம் அமைத்தது இரண்டாம் உலகப் போர் முடிவிலேயே (1945) ஆகும். ஆனால் குடியேற்ற நாடுகளில், சிறப்பாக ஆஸ்திரேலியாவில், பிறப்புரிமையுடைய உயர் வகுப்புக்கு இடமில்லாததனால் தொழிலாளர் வகுப்பின் சார்பில் தொழிற் கட்சியே தொடக்க முதற்கொண்டு உயர்நிலை யடைந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டுச்