பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. நோக்கமும் கோட்பாடுகளும்

ஐக்கிய நாடுகளின் அமைப்பு என்பது உலக நாடுகளின் ஒரு கூட்டுறவமைப்பு. அது சில நாடுகளால் திட்டமாகத் தீட்டப் பெற்றுப் பல நாடுகளின் ஏற்புப் பெற்றுள்ளது. நாளடைவில் எல்லா நாடுகளையும் உளப்படுத்தும் தன்மையில், அந்நோாக்கத் துடனே அது தீட்டப்பட்டுள்ளது.உலக நாடுகளில் இருபத்தைந்து நாடுகள் தொடக்கத்திலேயே அதில் சேர்ந்திருந்தன.1942க்குள் அத்தொகை 28 ஆகி, 1947க்குள் 55 ஆகி உள்ளது. இன்னும் அதன் கொடியின்கீழ் இணையாத நாடுகள் இருபத்து மூன்றே. இவையும் பெரும்பாலும் இரண்டாம் உலகப்போரில் எதிரி நாடுகளாயிருந்த ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி என்பனவும், அவற்றின் நேசநாடுகளும், ஒரு சில நடுவுநிலை நாடுகளுமே. மக்கள் தொகைவாரியாகப் பார்த்தால், உலக மக்கள் தொகையாகிய 200 கோடியில், 160 கோடி மக்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பில் தத்தம் நாட்டரசாங்கங்கள் மூலம் தொடர்புடையவர்களே. அதாவது, உலகில் நூற்றுக்கு எண்பது பேர் அமைப்பின் ஆதரவாளராகி யுள்ளனர். ஐ.நா. அமைப்புக்கு முன்னிருந்த சர்வதேச சங்கத்தில் உறுப்புக்களாயிருந்த நாடுகள் நாற்பத்து நான்கும், அவற்றைச் சார்ந்த மக்கள் தொகை 130 கோடியுமாகவே இருந்தன என்பதை நோக்க, உலக இயக்கத்தின் வளர்ச்சியும் அதற்கு மக்கள் காட்டும் பேராதரவும் நன்கு விளங்கும்.

ஐ.நா. அமைப்பின் முடிந்த முடிவான நோக்கம், போரை ஒழித்து, ஆக்கிரமிப்புக்கு இடமில்லாது செய்வதே. அது நாடுகளிடையே நேசவுணர்ச்சியைப் பெருக்கி, மக்கள் நல்வாழ்வை வளர்த்து, உலக அமைதியையும் ஒற்றுமையையும் பேணுவது. உலகின் கலை, நாகரிகம், தொழில் வளம், மக்கள் நலம் ஆகியவற்றுக்கு உதவத்தக்க ஒரு முழுமுதல் அமைப்பாய் அது