பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




I

4. ஆக்கமும் செயல் முறைகளும் - 1

ஐக்கியநாடுகள் அமைப்பு என்பது உலக முழுவதும் பரந்து செயலாற்றும் ஒரு நிலையான பேரியக்கத்தின் தலைமை நிலையம். அது உலகத்தையும் உலகமக்கள் வாழ்க்கையையுமே ஓர் உடலாகக்கொண்ட உயிர் என்னலாம். அது தன் உறுப்புகளால் நேரடியாகவும், தான் தொடர்புகொண்டுள்ள இணைப்பமைப்பு களால் தொலைமுறையாகவும் உலகவாழ்வு முழுவதும் பரந்து செயலாற்றுகிறது.

ஸான் ஃபிரான்ஸிஸ்கோ மாநாட்டிலேயே ஐ.நா. அமைப்புக்கு நிலையான ஒரு தலைமையிடம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு முன்னேற்பாட்டுக் குழுவிடம் விடப்பட்டிருந்தது. ஐ.நா. பேரவையின் முதற்கூட்டம் லண்டனில்தான் கூடிற்று. அச்சமயம் தலைமையிடம் பற்றிய பெருத்த வாதங்கள் ஏற்பட்டன. உலகில் பல நாடுகளும் தலைமையிடம் தம் நாட்டில் இருக்க வேண்டும் என வாதாடின. ஆனால், இதற்கென அமைக்கப்பட்ட ஐ.நா. குழு அமெரிக்க ஐக்கிய நாட்டையே தேர்ந்தெடுத்தது. அந்நாட்டிலும் ஸான் ஃபிரான்ஸிஸ்கோ, சிக்காகோ, நியூயார்க்கு, ஃபிலடெல்ஃபியா முதலிய பல நகரங்கள் இப்பெருமைக்குப் போட்டியிட்டன. இறுதியில் நியூயார்க்கே தலைமையிடமாகத் தேரப்பட்டது. இந்த இடத்திற்கான அமெரிக்க நாட்டு அரசாங்கத்தின் இணக்க உரிமைப்பத்திரம் முறைப்படி முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்நிலையான இடம் இதற்காக முற்றிலும் முன்னேற்பாடு செய்யப்படும்வரை, அந்நகரிலேயே ஏரித்தீவிலுள்ள லேக் ஸக்ஸஸ் (வெற்றி ஏரி) என்ற இடத்தில் அமைப்பின் பணிமனை அமர்வு பெற்றிருக்கிறது.

ஐக்கியநாட்டமைப்பின் பணிமனைகள் யாவும் அதன் தலைமையிடத்திலேயே உள்ளன. ஆயினும், அதன் உறுப்புகள் பலவும் பல இடத்திலும் அவ்வப்போது கூடுபவைகளே.