பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. ஓருலகச் சாதனைகள்

மனித இன வரலாற்றில் அருஞ்செயல்கள்,பெருஞ்செயல்கள் பல. புரட்சிகரமாக உலகை மாற்றியமைத்தவையும், வாழ்வில் ஆக்கமும் வளமும் பெருக்கியவையும் பல உண்டு. ஆனால் இவ்வெல்லாவகைச் சிறப்புக்களும் நலங்களும் ஒருங்கே அமையப் பெற்ற உலகப் பெருஞ் சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை சூயஸ், பனாமாக் கடலிணைப்புத் திட்டங்களேயாகும்.

பண்டைக்கால உலகம் மனித இனப் பண்பாட்டின் பெருமைக்குரிய அடையாளங்களாக நமக்குப் பல வீர காவியங்களை, பெருங் காவியங்களை அளித்திருக்கிறது. தமிழில் சிலப்பதிகாரம், மணி மேகலை; வடமொழியில் இராமாயணம், பாரதம்; கிரேக்க மொழியில் இலியத், ஓடிஸி; பாரசிக மொழியில் ஷாநமா ஆகியவை இத்தகையன. தற்கால உலகம் எழுத்துருவில் இவற்றுக்கீடான பெருங்காப்பியங்கள், வீர காவியங்கள் எவற்றையும் எடுத்துக் காட்ட முடியாதிருக்கலாம். ஆயினும் செயலுருவில் அத்தகைய வீரகாவியங்களாக இவ்விரு பெருஞ் சாதனைகளும் அமைந்துள்ளன.

வரலாற்றிலே, செயலரங்கத்திலே தீட்டிக் காட்டப்பட்ட பெருங் காப்பியங்களாக அவை திகழ்கின்றன.

இயற்கையை வென்று மனிதன் ஆற்றியுள்ள செயல்களே அருஞ்செயல்கள். அவற்றுள்ளும் குறிப்பிடத்தக்க பெருமதிப் புடைய பேரருஞ்செயல்கள் இக்கடலிணைப்புத் திட்டங்கள். ஏனெனில் சூயஸ், பனாமா என்ற பெயர்கள் இயல்பாகக் கடற் பகுதிகளின் பெயர்கள் அல்ல. அண்மைக்காலம் வரை அவை நிலப்பகுதிகளாகவே நிலவின. ஆனால் மனிதன் நிலம் பிளந்து கடலாக்கியுள்ளான். அவற்றின் வழியாகக் கடலோடு கடலைக் கலக்கவிட்டு, அவற்றை உலகக் கடல் வழிகளின் உயிர் மையங்கள் ஆக்கியுள்ளான்.