பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(284

அப்பாத்துரையம் – 10

மேலையுலகில் இதுபோல பினீஷியரும் பிற இனத்தவரும்

நடு உலகக் கடலைத் தங்கள் வாணிகத் தெப்பக்குள மாக்கியதுடன், பிரிட்டனுடனும் தொலைதூர அமெரிக்காவுடனும் தொடர்பு கொண்டதுண்டு. புது உலகாகப் பின்னாளில் கருதப்பட்ட இதே அமெரிக்காவுடன் தென்கிழக்காசிய மக்களும் தொடர்பு கொண்டு, அங்கே தம் தொல்பழங்கால நாகரிகம் பரப்பியதாக அமெரிக்கப் பழம்பொருளாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

நடுநிலக்கடலக மக்கள், தமிழினத்தவர், பிற தென்கிழக்காசிய மக்கள் ஆசிய இம்முத்திறத்தவர்களுமே நாலாயிர ஐயாயிர ஆண்டுகட்கு முன்னிருந்தே உலகின் கடலோடி இனங்களாக வாழ்ந்தவர்கள் வாழ்ந்து உலகெங்கும் நாகரிகம் பரப்பியவர்களாவர்.

சூயஸ் திட்டம் பற்றி வரலாற்று விடியற்போதிலேயே கனவு கண்ட எகிப்தியர்கள் பண்டை நடு நிலக் கடலக இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

எகிப்தியப் பேரரசர் சூயஸ் நிலக்காலைக் கடற்காலாக்கக் கனவு கண்டதுபோலவே, தென்கிழக்காசியாவில் பர்மியப் பேரரசர் 'கிரா' நிலக் காலைக் கடற்காலாக்கக் கனவு கண்டனர் என்று அறிகிறோம். சூயஸூம் பனாமாவும் நிறைவேறியபின்னும், இது இன்னும் உலகின் நிறைவேறாக் கனவாகவே

உள்ளதென்பது வியப்புக்குரியதன்றோ?

சூயஸ் பனாமாத் திட்டங்கள் இவ்வாறு தமிழக ஓருலகக் கனவுகள் மட்டுமல்ல, தமிழகக் கடல் மரபுடனும் தொடர்பு கொண்டது என்று காணலாம். பண்டைக் கடலோடிப் பேரினங்கள் மூன்றில், நடு நிலக்கடலக இனம், தென்கிழக்காசிய இனம் ஆகிய இரு திசை இனங்களின் இடையே நடுநாயகக் கடலோடி இனமாகத் தமிழகம் பண்டு விளங்கி வந்தது.

எகிப்தியர் கனவு கண்டு நனவாக்க விரும்பிய கடற்கால் முதலிலேயே இரு கடல்களை இணைக்க முனையவில்லை. முதலில் அவர்கள் செங்கடலுடன் நீலாற்றையே இணைக்கத் திட்டமிட்டனர்.

நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட எகிப்தியரின் இம்முதல் திட்டம் அத்தொல்பழங்கால உலக வரலாற்றின் மீது ஒரு புதிய ஒளி படரவிடுகின்றது.