பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




298

அப்பாத்துரையம் - 10

அமைக்க, திட்ட வேலையினர் இந்தப் பழங்கால்வாயின் தடத்தையே பயன்படுத்தினர்.

இவ்வாறு நாலாயிர ஆண்டுகளுக்கு மேலாக நீலாற்றுக் கால்வாய் சூயஸ் கடற்கால் திட்டத்தின் முன்னோடி முதற் படியாக அமைந்தது. ஆனால் அது இதனுடன் நின்று விடவில்லை. புதிய மறுமலர்ச்சித் திட்டத்தினுள்ளும் அது திட்டக் கூறாகப் புகுந்து நிலவரமாகப் பயன்பட்டது. படகுக் கால்வாய் புதிய ஊழியில் பாசன, குடிநீர்க் கால்வாயாகப் புதிய வடிவம் பெற்றுப் புதுப்பயன் கண்டது.

நீலாற்றுக் கடல்முகத்தை அடுத்துள்ள கால்வாய்ப் பகுதி இதன் பின்னும்கூட முற்றிலும் தடமழியாமல் 1897 வரையிலுமே நீடித்திருந்தது. அதனை முற்றிலும் மூடி நிரப்பிச் சமதளப்படுத்த ஆட்சியாளர் அவ்வாண்டில் ஆணை பிறப்பித்து நிறைவேற்ற வேண்டிவந்தது.

மார்க்கோபோலோ போன்ற உலகு சூழ்வரவாளர் மூலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குப்பின் நிலவழியில் கீழ்த்திசையுடன் புதுத் தொடர்பு ஏற்பட்டது. மூவாயிர ஆண்டுகளுக்கு முன் நடைமுறையிலிருந்த ஆசியப் பெருவழியின் ஒரு பகுதி இப்போது தமிழகக் கடல் வழியுடன் அராபியாவின் கடற்கரையில் சென்று இணைந்தது.

மேல் திசையில் இவ்வாணிகத் தொடர்பால் வெனிஸ் நகரம் வளமும் வலிமையும் செல்வாக்கும் புகழும் பெற்றது.15ஆம் நூற்றாண்டு வரை மூன்று நூற்றாண்டுகளாக அது மேலையுலகின் கடலரரசியாகவும், ஒரு கடற் பேரரசின் மையமாகவும் திகழ்ந்தது. வெனிஸியரின் இத்தனிப் பெருவளங் கண்டு மற்ற ஐரோப்பிய நாட்டினர் பொருமினர். அவ்வாணிகத் தொடர்பில் பங்கு கொள்ளவும், போட்டியிடவும் துடித்தனர். ஆனால் திடீரென நிலைமையில் எதிர்பாரா மாறுதலேற்பட்டது. 1453இல் மேலையுலகக் கலைத் தலைநகரான கான்ஸ்டான்டினோப்பிள் துருக்கியர் கைப்பட்டது.நடு உலகெங்கும் துருக்கிப் பேரரசாட்சி பரவி, எகிப்து அதன் மாகாண மாயிற்று. கீழ்த்திசை வாணிக வழி இதனால் மேலை யுலகுக்கு முழுவதும் அடைபட்டது.