பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




318

அப்பாத்துரையம் - 10

துருக்கியின் போக்கும் பிரிட்டனின் நோக்கும் கண்ட பாஷா சயீதுக்குத் தன்மான உணர்வும் துணிவும் எழுந்தன. சூயஸ் திட்டம் எகிப்தின் உள்நாட்டுத் திட்டமேயாதலால், இதில் துருக்கியின் மேலுரிமை ஏற்பிசைவுக்கு அவசியமேயில்லை யென்று அவர் அறிவித்தார். கூட்டுக் கழகம் தொடங்குவதற்கு மட்டுமன்றி, திட்டவேலை தொடங்குவதற்கே அவர் இசைவளித்தார்.

பிரிட்டன் தன் கடைசி முயற்சியாகப் பிரான்சுடன் அரசியல் பேச்சுக்கள் நடத்திற்று. அதில் எதிர்பார்த்த விளைவு கிட்டவில்லை.திட்டத்தை இரு நாட்டின் அரசுகளும் தனி மனிதர் முயற்சியாக விட்டுவிடவேண்டும் என்ற முடிவே ஏற்பட்டது.

சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகத்துக்கு உலகக் கடலோடி நாடுகள் எல்லாவற்றின் ஆதரவும் பங்குகளும் இருக்கவேண்டு மென்று லெஸெப்ஸ் கருதினார். அதற்கிசைய அதன் திட்டம் அமைக்கப்பட்டது.

கழகத்தின் உரிமைபெற்ற பங்குமூலதனம் 20 கோடி பிரஞ்சு வெள்ளிகள். பங்கு ஒன்றுக்கு 500 வெள்ளியாக, இது 4 இலட்சம் பங்குகள் கொண்டதாகும். எல்லா நாடுகளுக்கும் நேரிய பிரதி நிதித்துவம் இருக்க வேண்டுமென்பதற்காக, நாட்டுவாரியாகப் பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

தொடக்க மூலதனமாக, 314,944 பங்குகள் கோரி லெஸெப்ஸ் எல்லா நாடுகளுக்கும் அறிக்கை வெளியிட்டார். பங்குகள் எளிதில் திரண்டன.1858இல் சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகம் நிறுவப்பட்டது. கழகத் தலைமை நிலையம் எகிப்திலும், பணிமனை பாரிஸிலும் நிறுவப்பட்டன. பிரான்சு 2,00,000 பங்குகளும், துருக்கி 96,000 பங்குகளும் எடுத்தன. எகிப்தியப் பாஷா தம்சார்பில் 85,506 பங்குகள் தொடக்கத்திலேயே ஏற்றார். ஆனால் பிரிட்டனுக்கு 80,000 பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பிரிட்டன் சார்பில் பங்குகள் தீண்டப்படவில்லை. அரசியல் முறையில் முதலமைச்சர் பாமர்ஸ்டனும், தொழில் துறை அறிஞர் ராபர்ட் ஸ்டிபன்ஸனும் அதை எதிர்த்ததனாலேயே இந்நிலை ஏற்பட்டது.