பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

1325

தொடக்கத் தொல்லைகள் ஓரளவு ஆறி அமைந்து, 1866க்குப் பின் திட்டமும் திட்ட வேலையும் வேகமாக முன்னேறின.

இறுதியில் 1869ஆம் ஆண்டில் செங்கடலிலிருந்தும் நடுநிலக் கடலிலிருந்தும் இரு திசையில் வெட்டப்பட்ட கடற்கால்களும் ஒன்றை ஒன்று வந்து அணுகின. இடையே ஒரு திட்டு மட்டுமே எஞ்சியிருந்தது. அதை வெட்டிக் கடலுடன் கடலை இணைவிக்கும் நிகழ்ச்சி ஒரு சிறு விழாவாகக் கொண்டாடப்பட்டது. பொறிவலாளர் கள், தொழிலாளர்கள் ஆர்வ ஆரவாரங்களிடையே, கீழையுலகும் மேலையுலகும் வந்து கலப்பது போலக் கீழ்க்கடல் அலைகள் மேல் கடல் அலைகளுடன் வந்து கலந்தன. தொடக்க விழாவில் முதல் கூடை மண்ணை வெட்டிய லெஸெப்ஸ் கைகளே, இறுதிக் கூடை மண்ணும் வெட்டிக் கடலிணைப்பு வேலைக்கு மகுடம் வைத்தன.

கடற்காலின் திறப்பு விழா 1869ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாளன்று ஓருலகப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

எகிப்திய பாஷா உலக நாடுகளுக்கெல்லாம் முடங்கல் போக்கி, உலக அரசியல் முதல்வர்கள், வாணிகப் பெருநிலையப் பேராட்கள், அறிவு முனைவர்கள் முதலியவர்களை யெல்லாம் விழாவிற்கு வரவழைத்திருந்தனர்.

தொல்பழங்கால எகிப்தியப் பேரரசர் திறைகள் பல ஏந்திய வண்ணம் வெற்றிப் போர்க்களங்களிலிருந்து மீண்டபோது, எகிப்தெங்கும் அவரை அணியணியாக நின்று குழுமி வரவேற்ற காட்சியையே நினைப்பூட்டும் வகையில், கடற்கால் முகப்பில் மட்டுமன்றி, கால்வாயின் நூறு கல் நீளமுள்ள தொலை முழுவதிலும் இரு கரைகளிலும் நடுவுலகப் பெருங்குடி மக்கள் வந்து நின்று திரள் திரளாகக் காத்திருந்தனர்.

நவம்பர் 16ஆம் நாள் மாலையிலேயே பல நாடுகளுக்குரிய போர்க்கப்பல்கள், வாணிகக் கலங்கள், படகுகள் சயீத் துறை முகத்தில் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அவ்வந் நாட்டுக்குரிய கொடிகள், அவ்வந் நிலையங்களுக்குரிய அடையாளங்கள் விழாக்கோலம் பூண்டு

பறந்தன.