பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 அப்பாத்துரையம் 11

வீரராசேந்திரன் விக்கிரமாதித்தியனுக்கு உதவி செய்தான். விசயவாடாப் போரில் அவன் பெரு வெற்றி கண்டு, விக்கிர மாதித்தனுக்குத் தென்பாதி அரசை வாங்கித் தந்தான். அவனுக்கே தன் மகளையும் மணம்செய்து தந்து நேசத்தை உறுதிப்படுத்தினான். ஹைதராபாதில் காடிகல் என்ற இடத்தில் இவ்வெற்றிக்கு அறிகுறியாக வீரராசேந்திரன் வெற்றித்தூண் நாட்டினான்.

வீரராசேந்திரன் பிள்ளைகளில் மதுராந்தகன் என்ற ஒருவன் சோழேந்திரன் என்ற பட்டத்துடன் தொண்டை மண்டலத்திலும், கங்கை கொண்ட சோழன் என்ற மற்றொருவன் சோழபாண்டியன் என்ற பட்டத்துடன் பாண்டி நாட்டிலும் மண்டலீகர்களாக ஆண்டனர். வீரராசேந்திரன் காலத்திலும் பல சிற்றரசர்கள் கிளர்ச்சி செய்தனர். அவர்களுள் பொத்தப்பி அரசன், சேர அரசன், தாரா வருஷ மன்னன் தம்பி, பாண்டியன் சீவல்லபன் மகன் வீரகேசரி ஆகியவர்களை அவன் போரில் கொன்று வாகை சூடினதாக அறிகிறோம்.

கடாரம் அல்லது சீர்விசய நாட்டிலும் அரசுரிமை கோரிய இரு இளவரசனுக்காகப் போரிட்டு, வீரராசேந்திரன் அவனைப் பேரரசனாக்க உதவினான்.

வீரராசேந்திரனுக்குப்பின் அவன் பிள்ளைகளுள் ஒருவனே அரசுரிமைக்கு வந்ததாக அறிகிறோம். ஆனால், அவன் மைத்துனனான மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தியன் அவனுக்கு உதவி செய்தும்கூட, அவனுக்கெதிராக நாடெங்கும் கிளர்ச்சியும், குழப்பமும் மிகுந்தன. அவன் ஓரிரு வாரங்களே ஆட்சி செய்து மாண்டான்.

சக்கரக் கோட்டத்திலிருந்து கொண்டே ஒரிசாப் பகுதியிலும் கடல்கடந்த நாடுகளிலும் தன் வெற்றிப்புகழ் நாட்டிவந்த கீழைச்சாளுக்கிய இராசேந்திரன் இப்போது சோழநாடு வந்து முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழப் பேரரசைக் கைக்கொண்டான்.


முதலாம் குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்கன் (1070-1120) சாளுக்கியர் குடிக்கும் சோழர் குடிக்கும் ஒருங்கே உரியவனாதலால் உபய