பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. இயற்கை எல்லை


நாளைக்கொருவன், வேளைக்கொருவன் - சங்கிலி வரிசையாக முன்வாசலில் மூவர், பின்வாசலில் நால்வர்- இப்படி குடும்பம் நடத்திய 'வாழ்வரசி' ஒருத்தி மற்றொருத்தியை-தன் கணவன் வெளிசெல்லவிட்டு அடைத்துக்கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து, 'அடி வாழாவெட்டி' என்று அழைத்தாளாம்! இந்தக் கதையை நினைவூட்டுகிறது, திராவிட இன எழுச்சியாளரைப் பார்த்துப் பாரத தேசபக்தர்கள் கேட்கும் கேள்விகள்-‘எது திராவிட நாடு? திராவிட நாட்டு எல்லைகள் என்ன? திராவிட நாடு பெறமுடியுமா?' என்பவை. ஏனெனில் திராவிட நாடு பண்டைப் பெருநாடு, உலகின் முதல் தேசிய இனம், என்றும் தனி வாழ்வும் பெருவாழ்வும் வாழ்ந்த பேரினத்தாயகம். ஆனால் இந்திய மாநிலமோ இன்று ஆசியாக் கண்டத்தின் ஒரு பெரும்பகுதியாகிய துணைக்கண்டம், ஒரு குட்டி உலகம். பழங்காலத்திலோ, பழைய புராணகால நிலநூலின்படி, உலகின் ஒன்பது கண்டங்களில் அது ஒரு முழுக்கண்டம். இன்னும் பழங்காலப் புராணங்களின்படி, அதுவே ஒன்பது கண்டங்களையும் உள்ளடக்கிய முழு உலகமாய், ஏழு உலகங்கள் அல்லது தீவங்களில் ஒன்றா யிருந்தது. பாரதகண்டத்தை உள்ளடக்கிய பாரத வர்ஷமாகிய அதையே மனிதஇனம் வாழும் முழு நிலவுலகமாக, உப்புக்கடல் சூழ்ந்த நிலவலயத்தீவமாக மிகப் பழம்புராணங்கள் கற்பனை செய்துள்ளன. மற்ற நிலவலயத்தீவங்கள் அல்லது உலகங்கள் ஆறும் பால்கடலாலும், தயிர்க்கடல், நெய்க்கடல்களாலும் சூழப்பட்டவை-இயக்கர், கந்தருவர், கின்னரர், தேவர் வாழ்பவையாம்!

திராவிட நாட்டுக்கு இயற்கை எல்லைகள் உண்டு. மூன்றுபுறம் கடல். ஒருபுறம், வடக்கே, விந்திய மலையும் நடுமேட்டு நிலமும் அவற்றின் கடக்கமுடியாக் காடுகளும் நிலவுகின்றன.