பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




9. கடலாண்ட இனம் திராவிடம்


திராவிடம் பண்டிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை உலகின் செல்வவளமிக்க நாடு. திராவிடர் நாகரிக உலக நாடுகளெங்கும் சென்று குடியேறியும், வாணிகம் வளர்த்தும் உலகின் குபேர நாடுகளில் முதல் குபேர நாடாகத் தம் மாநிலத்தை வளமாக்கி யிருந்தனர். இன்றுபோல் உலகின் வாணிக விலைக் களமாகத் தென்னாடு என்றும் - அணிமைக்காலம் வரையிலும் - இருந்ததில்லை. தொழிலும் வாணிகமும் பெருக்கி, உலகெங்கும் தன் விலையேறிய சரக்குகளை அனுப்பி, நாகரிக உலகையே திராவிடர் தம் வாணிகப் பெருங்களமாக்கியிருந்தனர். இதற்கேற்ப ஆழ்கடல் கடக்கும் கப்பல்களும் கப்பல் தொழிலும் திராவிடத்திலே செழிப்புற்றிருந்தன.

இரண்டாயிர ஆண்டுகளுக்குமுன் இமயம்வரை வென்று பர்மாவையும் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்திருந்த ஆந்திரப் பேரரசர் ஆழ்கடல் செல்லும் இரு பாய்மரக் கப்பல்களையே தம் நாணயங்களில் வீறுடன் பொறித்திருந்தனர்! இராசேந்திர சோழன் 12-ஆம் நூற்றாண்டில் கடாரம் அதாவது தென்கிழக்காசியாவை வென்று ஆண்டது இத்தகைய கப்பல் தொழிலின் உருத்தகு வெற்றிக்கு ஒரு சான்று.

19ஆ-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நீராவிக் கப்பல்கள் புதிதாக உலகில் எழும்வரை உலகின் சிறந்த கப்பல்களும், மிகப் பெருங் கப்பல்களும் தென்னகத்தில் செய்யப்பட்ட திராவிடக் கப்பல்களே. வெள்ளையர் திராவிடத் தச்சர்களைத் தம் நாட்டுக்குக் கொண்டு சென்றுதான், கீழ்திசைக் கப்பல்களை ஆட்கொள்ளும் அளவு தம் கப்பல் படையைப் பெரிதாக்கிக்கொண்டனர் என்பதை, முக்கர்ஜி என்பாரின் "இந்தியக் கப்பல் தொழிலும் கடலோடி வாழ்வும்” என்ற வரலாற்றாராய்ச்சி ஏடு எடுத்துக் காட்டுகிறது. 1840-ஆம் ஆண்டு வெள்ளையர் இந்தியாவில் நிறைவேற்றிய 'கப்பல் தொழில், கடல் வாணிகச்