பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 165

கடல் கடந்து வாணிகமும் குடியேற்றமும் கண்டனர். ஆரியரோ கடல் கடந்தவரை-திராவிடரைக்கூடத் தம் சாதி வருணாசிரமக் கோட்டையிலிருந்து விலக்கி வைக்கச் சட்டம் இயற்றினர்.

திராவிடப் பேரரசர் உலகெங்கும் கடல் கடந்த பேரரசுகளும் பேரரசத் தொடர்புகளும் கொண்டனர். இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட பாண்டியர், உரோமப் பேரரசர் அகஸ்டஸுடன் தூதுத் தொடர்பும் அரசியல் கூட்டுறவும் கொண்டனரென்றால், அதே உறவை 13-ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டியர், சீனப்புகழ்ப் பேரரசன் குப்ளாகானுடன் மேற்கொண்டிருந்தனர். இவ்விரு கோடிக்கும் இடைப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கிடையே இதேபோன்ற தொலை உலகத் தொடர்பு பல்லவப் பேரரசருக்கும் சோழப் பேரரசர்க்கும், சாளுக்கியப் பேரரசர்க்கும் இருந்தது. ஆனால் வடதிசையோ நிலப் பேரரசன்றிக் கடற் பேரரசு அறியாதது. கடல் கடந்த, எந்த நாட்டின் பெயரும்கூட-இராமாயணம் குறிப்பிடும் புராணக் கற்பனை இலங்கை தவிர-வேறு எதுவும் வடதிசை மரபு அறியாதது.

புத்த சமயப் பிரசாரம் காரணமாகத் தற்செயலாக அசோகன், ஹர்ஷன் காலங்களில் பிற நாகரிக நாட்டவர் இந்தியாவுடன் கொண்ட தொடர்பன்றி, வடதிசை அரசர் பேரரசர் எத்தொடர்பும் வெளியுலகுடன் நாடியதில்லை. அவர்கள் இலக்கியத்தில் உலகம் என்பது வட இந்தியாவாகவே இருந்தது. தென்னகத்தைக்கூட அவர்கள் அறிந்ததில்லை. அதே சமயம் தமிழர் பண்டுதொட்டே இமய உச்சியில் ஏறித் தமிழ்க்கொடி பொறிக்கும் ஆர்வக் குறிக்கோள் உடையவராய் இருந்தனர்-திரைகடலோடியும் திரவியம் தேடு என்று சிறுவருக்கே போதித்தனர் !