பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




10. கடலாட்சியும் கடற்படையும்


ஆரியர் வருவதற்குமுன் திராவிடருக்கு இருந்த கோட்டை கொத்தளங்கள், வீரம் செல்வம், உழவு தொழில் வளங்கள், வாணிக வளம் ஆகியவைபற்றி ஆரிய வேத உபநிடதங்களே ஏராளமாகச் சான்று பகர்கின்றன. ஆரியர் வறுமை வாழ்வு, வீரமற்ற வஞ்சகச் சூழ்ச்சி மரபு, தொழில் வாணிகமீது வெறுப்பு, உழவுமீது வெறுப்பு ஆகியவை இன்னும் ஆரிய வருணாசிரம மரபை உற்று நோக்குவோர்க்கு வெள்ளிடை மலையாக விளங்கும். திராவிட மரபுப்படி உழவுத் தொழிலுக்குரிய வேளாளரும் மற்றத் தொழிலாளரும் வீரமரபினருமே உயர் குடியினராகப் போற்றப்படுகின்றனர். ஆனால் ஆரிய வருண மரபில் அவர்கள் கடைப்படிக்கும் கீழ்ப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கி. மு. 4-ஆம் நூற்றாண்டில் வட திசையில் வாழ்ந்ததாகக் கூறப்படும் தென்னகப் பார்ப்பன அறிஞராகிய சாணக்கியர், தம் காலத்தில் விலையேறிய ஏற்றுமதி வாணிகத்துக்கும் செல்வ நிலைக்கும் தென்னாடு பேர்போனது என்பதையும், வடதிசை வாணிகம் அத்தகு சிறப்பு ஒரு சிறிதும் அற்றதாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். 14-ஆம் நூற்றாண்டில் தென்னகம் வந்த வெளிநாட்டு யாத்திரிகரான மார்க்கோபோலோவும் இபன்பதூதாவும் வஸஃவ்வும் இதே நிலை அணிமைக் காலத்திலும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். செல்வ வளமும் அரசியலாற்றலும் மிகுந்த தென்னகத்தைப் பெரிய இந்தியா என்றும், அது குன்றிய வடதிசையைச் 'சிறுமை இந்தியா' என்றும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

விசயநகரப்பேரரசர் நீங்கலாகத் தென்னக அரசர், பேரரசர் யாவருக்கும் இருந்த கடற்படை வடதிசை அரசர்கள, பேரரசர்கள் எவரும்- அசோகன் முதல் அவுரங்கசீப்வரை