பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 169

திராவிட நாட்டின் தனிப் பேரினமான திராவிட இனமே, இந்தியத் துணைக் கண்டத்தின் அடிப்படை இனம் என்பதை இந்தியக் கூட்டுறவரசு வெளியிட்டுள்ள இனவாரிப் படமே தெளிவாகக் காட்டும். விந்தியம் வரையுள்ள தென்னகப் பரப்புத் தூய திராவிட இனமாகவும், பஞ்சாப், இமயமலையடிவாரம் தவிர மீந்த பகுதிகள் பல்வேறினங்களுடன் கலந்த திராவிட இனமாகவுமே அதில் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இது திராவிட இனத்தின் தேசியப் பரப்பல்ல. அதன் உலகளாவிய நாகரிகப் பரப்பின் ஒரு பகுதியே. ஏனெனில் இன வரலாற்று அறிஞர், பண்பாட்டு வரலாற்று அறிஞர் கூற்றுப்படி, தென்கிழக்காசியா தென் ஆசியா, மேலை ஆசியா, தென் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பெரும் பரப்புக்களின் இன, நாகரிக அடிப்படைப் பண்பாடே திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையது என்று கூற இடமுண்டு.

திராவிடம் தேசிய இனமா என்று வடவரும் வடவர் பக்தரும் கேட்கும் கேள்வி இவ்வாறு அவர்களுக்குத்தான் ஆபத்தான கேள்வியாக முடிகிறது. ஏனெனில் அதன் விடை திராவிடம் தேசிய இனம் என்பது மட்டுமன்று, திராவிடம்தான் பண்டை உலகின் ஒரே தேசிய இனம் என்பது. பாரதமோ பண்டை உலகிலும் தேசிய இனமன்று, இன்றைய உலகிலும் ஒரு தேசிய இனமன்று. ஒரு தேசிய இனமாகவோ, தேசிய இனக் கூட் டுறவாகவோகூட அது வருங் காலத்தில் உருவாகும் வாய்ப்புடையதன்று. ஏனெனில் அத்தகைய தேசிய இனக் கூட்டுறவைக் குடியாட்சிப் பண்பு அளாவிய ஒரு உயிர்த் தேசிய இனமே வளர்த்து உருவாக்க முடியும். திராவிட இனத் தேசியம் அத்தகைய குடியாட்சிப் பண்புடைய உயிர்த் தேசியம். அதன் வழி நின்றால் தென் கிழக்காசியாவே, ஆசியாவே ஒரு உயிர்த்தேசியக் கூட்டுறவாக வளம் பெறமுடியும். வடதிசைப் போலித் தேசியமோ உருவாகாத் தேசியங்களை அடக்கியாள நினைக்கும் ஒரு செயற்கை ஏகாதிபத்தியம்-வெள்ளை ஏகாதிபத்தியம் உருவாக்கி இயங்கவிட்டுச் சென்ற குட்டி ஏகாதிபத்தியம். அதனால் உயிர்த் தேசியமாக இயங்கவும் முடியாது; உருவாகாத் தேசியங்களை உருவாக்கும் திராவிடப் பண்பாற்றலும் அதற்குக் கிடையாது.