பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 அப்பாத்துரையம் 11


இது ஏகாதிபத்தியத்தின் அரசியல் சூழ்ச்சிக் குரல். பேராசைப் பேயின் அலறல் பேச்சு.

உலகளாவிய மனித இனப்பாசம் பேசும் மனித இனக் கங்காணிகள், இமயமளாவிய கதம்ப தேசியம் பேசும் கீழ்திசைத் தேசிய விபீஷணர்கள், இமயத்திலிருந்து தொங்கிக்கொண்டு தமிழ்ப்பற்றுடையார்போல் நடிக்கும் ஐந்தாம்படை ஒற்றர்கள், ஏகாதிபத்தியதாசர்கள், தில்லியின் தத்துப்பிள்ளைகளான இளையாழ்வார்கள் கேட்கும் கேள்விகள் இவை.

அடிமைத்தனத்திலும் தெரியாத்தனத்திலும் சூழ்ச்சி முறையிலுமே இக்கேள்விகள் திராவிட மக்களிடம் கேட்கப்பட்டாலும், திராவிடத் தலைவர்கள், திராவிட அறிவியக்க அறிஞர்கள் இவற்றிற்கு உவகையுடன் பதில் கூற முன்வருகிறார்கள். ஏனெனில் இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் - நூற்றுக்கு ஓரிருவர்கூடக் கல்விபெறாத நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நம் திராவிட மக்களிடையே அரசியலறிவை, கல்வியின்பத்தை, தன்னின வரலாற்றறிவை, இனப் பண்பாட்டறிவைப் பரப்ப இக்கேள்விகள் பயன்படுபவை ஆகும். அவற்றின் விளக்கங்கள் வருங்காலத் திராவிடத்தின் அறிவுக்கோயில்களைக் கட்டமைப்பதற்கான தூண்டுதல் தருபவை ஆகும்.

இவற்றுக்கான விளக்கம் கூறுவதன் நோக்கம் கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக மட்டுமல்ல. அதைவிடப் பயனுடையது மக்களுக்குத் தரப்படும் அறிவு விளக்கம். இன்னும் நிலையான பயனுடையது விளக்கத்தின் பின்னணியில் இருந்துகொண்டு திராவிட மறுமலர்ச்சி இளைஞர், நங்கையர் உருவாக்க இருக்கும் வருங்காலத் திராவிட வாழ்வின் அருங்கலச் செல்வம், திராவிடர் புதுவாழ்வுத் திட்டம்!

இவ்விளக்கம் கேட்ட பின்னும் கேள்வி கேட்டவர் மீண்டும்மீண்டும் கேட்கலாம். கேட்ட கேள்வியையே கேட்கலாம். அதனாலென்ன? கேட்டவர் தாமே பதில் கூறும்வரை, திராவிட அறிவுப் படையில் முன்னணி வீரராகும் வரை நாம் புதிது புதிதாகப் பதில் கூறிக்கொண்டே இருக்கும் பண்புவளம், அறிவு வளம், மொழிவளம் கொண்டவர்கள்தாம். இவ்விளக்கமே வருங்காலத் திராவிடத்தின் புதுமலைகளாக, ஆறுகளாக,