பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 175

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குரலில் ஓருலக வேதாந்தம் பசப்புகிறது.

ஓருலகம், ஒரு மனித இனம் என்ற கனவு இன்றைய உலகின் கனவு. ஆனால் ஒருசில நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ், தமிழகம், தமிழிலக்கியம் நீங்கலான எந்த நாடும் மொழியும் இலக்கியமும் அதை அறியாது. பாரதப் புதல்வர்களின் முன்னோர்களோ என்றும் ஓருலகக் கனவு கண்டதில்லை. தேசம், ஒரு குலமும் நாடியதில்லை. அவர்கள் விரும்பியது வருணாசிரம தருமம்—அது தேச வாழ்வை, சமுதாய வாழ்வை, பொருளியல் வாழ்வைப் பிரித்தது. ஒரு தேசத்தைமட்டுமல்ல, ஒரு ஊரையே ஒன்றாக வாழமுடியாமல், துண்டுதுண்டாகப் பிரித்தது. சமத்துவம், சம உரிமை கெடுத்து ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணிற்று. ஆனால் தமிழர் இரண்டாயிர மூவாயிர ஆண்டுகட்கு முன்னும் ஓருலகைக் கனவு கண்டவர்கள். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று ஓருலக அடிப்படையிலே ஒரே ஆண்டவனைக் கனவு கண்டவர்கள். தமிழ் பேசும் பகுதிகளனைத்தையும்-தென்னாட்டையும் தென்னவர் குடியேறி ஆண்ட பகுதிகளையும் ஒருங்கு சேர்த்து அவர்கள் தமிழுலகம் என்றே கூறினர்.

தமிழர் இன்று அயலினத்தார் பரப்பாகிய இந்தியாவுடன் கட்டுண்டு மறுகுகின்றனர். ஆனால் தமிழ் பேசுகிற தமிழர் வாழும் தமிழுலகத்தினின்று வெட்டுண்டு கிடக்கின்றனர். அதுமட்டுமோ? தமிழர் வெளிநாடுகளில்கூட வாழமுடியாத நிலையில் இந்த அயலினக் கூட்டுறவு நீடிக்கிறது. அது தமிழரைத் தமிழரிடமிருந்து பிரித்து வைக்கிறது. தமிழினத்தவன் தமிழரைப் பகைக்கும்படி ஓயாது தூண்டி வருகிறது.

உலகம் என்ற சொல் தமிழிலக்கியத்தில் பயின்ற அளவு உலகில் வேறெந்த இலக்கியத்திலும் பயின்றதில்லை.

உலகம் என்ற சொல்லையே மங்கலச் சொல்லாகக் கொண்டு தொடங்கிய இலக்கிய ஏடுகள், சமய ஏடுகள், காவியங்கள் பல. அவை 'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்' 'உலகம் யாவையும் தாமுள வாக்கிய தலைவர்' என்று இறைவனைப் போற்றின. "உலகெல்லாம் இன்புற்றிருக்க' அவாவினர் தமிழர் ! அந்த உலகத்தையும் ஓர் உலகம், ஒரே ஆண்டவனை ஒப்பற்ற ஒரே தந்தையாகக் கொண்ட ஒருலகக் குடும்பம், சாதிவேறுபாடற்ற,