பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 அப்பாத்துரையம் 11

சரி, உலகிலும் சரி, அது இன வேறுபாடற்ற, நாடு வேறுபாடற்ற ஒற்றுமையையே - சரிசமத்துவ ஒற்றுமையையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதன் இலக்கியம், ஆரியக்குளறுபடியில்லாத நிலையில், அவர்கள் சமய இலக்கியம் கூட, இதற்காகவே போராடுகிறது. ஆனால் பாரத போலித் தேசியமோ அதன் போலி நாகரிகமோ, இதற்கு நேர்மாறாக, வேற்றுமையை, உயர்வு தாழ்வு அடிப்படையான ஒருமையை அதாவது சமத்துவ மற்ற ஒற்றுமையை, ஆண்டான் அடிமை ஒற்றுமையை, போலி ஒற்றுமையை, ஒற்றுமை என்ற தவறான பசப்புப் பெயரால் பொதுமக்கள் மீதும் மற்ற இனத்தவர் மீதும், தன் ஏகாதிபத்தியப் பிடியில் சிக்கிய மற்ற நாட்டவர்மீதும் போலிப் புலமைப் போர்வையிலோ, போலிச் சமயப் போர்வையிலோ, போலித் தேசியப் போர்வையிலோ புகுத்திவிட முயல்கிறது.

'இன வேறுபாடு காட்டாதே’ என்கிறார்கள் பாரத பக்தர்கள். ஆனால் திராவிடர் கேட்பது இன வேறுபாடல்ல, இன உரிமை, இன வேறுபாடற்ற சமத்துவம். பாரத பக்தர்கள் வெறுப்பது இன உயர்வு தாழ்வு வேறுபாடல்ல, 'இனம்' என்ற பெயர், இனங்களிடையே சரி சம நிலை! அவர்கள் நாடுவது இன ஒற்றுமையல்ல. இன ஆதிக்கம்; இன முதலாளித்துவம், ஓர் இனத்தை உழைக்கும் இனமாக்கி, அந்த உழைப்பினத்தை அடிமையினமாக்கி, உழையாத, தகுதியற்ற இனத்தை, மொழியை, நாட்டை அரியாசனம் ஏற்றப் பார்க்கிறவர்களே அவர்கள் !

இனத்துக்கு இனம் வேற்றுமை, சாதிக்குச் சாதி வேற்றுமை ஆகிய பழைய வருணாசிரம தரும வேற்றுமை போதாதென்று, பாரத பக்தர்கள் இப்போது வடதிசை தென்திசை வேற்றுமையையும் உயிர் வேற்றுமையாகப் பாராட்டுகிறார்கள். உண்மை உயிர்த் தேசியமான தெற்கு, போலிப்பொய்த் தேசியப் பரப்பான வடக்கு என்ற இயற்கை வேறுபாட்டைத் தலைகீழாக்கி, பொய்த் தேசியத்துக்கு உண்மைத் தேசியத்தைப் பலியிட்டு, முன்னதிலே பின்னதை அடக்கப் பார்க்கிறார்கள். பொருளில் நிழலை அடக்கினால்கூடக் கேடில்லை-நிழலில் பொருளை அடக்கப் பார்க்கிறார்கள். தாமரைமலர் பூவல்ல, தாமரையின் நிழல்தான் பூ, தாமரை மலர் தான் நிழல் என்கிறார்கள். தாமரைக்கு மணமில்லை, அதன் நிழலுக்குத்தான் மணம் என்கிறார்கள்!