பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




25. திராவிடம் நாகரிகம் வளர்க்கும் பண்பு; ஆரியம் அது கெடுக்கும் பண்பு

மொழியின் சொற்கள் மொழியுடன் வளர்பவை. அவை என்றும் முற்றிலும் பொருள் மாறுபட்டு விடுவதும் இல்லை. அதே சமயம் என்றும் அவை முற்றிலும் ஒரே பொருளைச் சுட்டுவதும் இல்லை. அடிப்படைப் பண்பு கெடாமல், பண்பு வளர்ச்சி பெற்றுப் படிப்படியாகப் பொருள் எல்லை மாறுபடும், உயர்வு தாழ்வடையும். எடுத்துக்காட்டாக, இன்று ஆங்கிலத்தில் உந்து வண்டிக்குப் பயன்படுத்தப்படும் சொல் (Car) முன்பு ஒய்யார வண்டி அல்லது விசையாகச் செல்லும் வண்டி அதாவது தேருக்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லே, தொடக்கத்தில் விசைத்தேர் (Motor Car) என்று வழங்கி, பின் தேர் என்ற பொருளுடைய சொல்லாகவே வழங்கிற்று. இச் சொல் ஆங்கில நாட்டு வாழ்வில் உந்து வண்டி அல்லது விசை வண்டித் துறையில் அமைந்துள்ள முன்னேற்றத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டு, ஓரின வரலாறாக இயங்குகிறது.

'இனம்' என்ற சொல்லும் திராவிடர் நாவில் இனச் சார்பாகத் திராவிட மக்கள் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் குறித்துக் காட்டுவது ஆகும். அதனால் அதன் மேலையுலகச் சொல் (Race) போலவே அதை நாம் குடும்பத்திலிருந்து தொடங்கி, தேசிய இனம், மனித இனம்வரை கொண்டு செல்கிறோம். ஓருலகம், ஒரே மனித இனம் நோக்கிய திராவிடப் பண்பாட்டின் வளர்ச்சியை இது குறிக்கிறது. அது மட்டுமன்று. ஆங்கிலச் சொல்லின் அடைவடிவம் (Racy) இனப் பண்பு அல்லது உயிர் வளர்ச்சிப் பண்பையும் அதன் பயனான ஆக்கவளம், இன ஆக்க வளத்தையும், மொழியின் இணைப் பண்பையும் குறிப்பதுபோல, ஆங்கிலச் சொல்லைவிடச் சிறந்த முறையில், அது தமிழில் வளமும் இனிமையும் சிறப்பும் உடையது.