பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 9

கடலுலகின் மைய இடத்தில் நில உலகின் நடுநாயக நாடாக அமைந்திருக்கிறது. இதனைச் சூழக்கடலகத்தில் திட்டுக்களும் தீவுகளும் உள்ளன. தென்னாட்டினரைப் பண்டை நாளிலிருந்தே நாகரிக உலகத்தின் கடலோடிகளாகவும், கடல் வாணிகராகவும் ஆக்கியது இவ்வமைப்பே. தென்னாட்டுப் பேரரசர் பலர் கடல்கடந்த நாடுகளில் சிறப்பாகக் குமரிக்கண்டப் பகுதிகளில் தம் பேரரசைப் பரப்பினர். வாணிகமும், குடியேற்றங்களும் மிகுந்தன. தென்னாட்டுப் பேரரசுகள் இங்ஙனம் கடற்பேரரசுகளாய் இருந்ததனாலேயே, அவர்களிடம் வலிமை வாய்ந்த கடற்படைகள் இருந்தன.

தென்னாட்டின் மேல்கடற்கரை 800[1] கல்(1280 கி.மீ) நீளமும், கீழ்க் கடற்கரை 1100 கல் (1760 கி.மீ.) நீளமும் உடையது. எனவே இந்நாட்டின் மொத்தக் கடற்கரை நீளம் 1900 கல்(3040 கி.மீ.), அதாவது கிட்டத்தட்ட2000கல் (3200 கி.மீ.), ஆகும். இதில் கீழ்க்கரையில் விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம், காக்கினாடா சதுரங்கப் பட்டினம், சென்னைப் பட்டினம், பாண்டிசேரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய துறைமுகப் பட்டினங்களும், மேற்குக்கரையில் குளைச்சல், ஆலப்புழை, கொச்சி, கள்ளிக்கோட்டை, மங்களூர், கோவா முதலிய துறைமுகப்பட்டினங்களும் உள்ளன. பம்பாய், சூரத் ஆகிய துறைமுகங்களும், நிலஇயல் முறைப்படி தென்னாட்டைச் சேர்ந்தவையே. பண்டைக்காலத்தில் கலிங்கப்பட்டினம், மரக்காணம், மல்லை (மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரம்), புகார் (காவிரிப்பூம்பட்டினம்), சோழன் தொண்டி, பெருந்துறை, காயல், கொற்கை, உவரி, விழிஞம், சேரன் தொண்டி, வஞ்சி, முசிறி ஆகிய துறைமுகங்கள் தென்னாட்டில் ஆக்கமுற்று இருந்தன. இவற்றுள் பல நகரங்கள் மேலை உலக வாணிகமும், கீழை உலக வாணிகமும் வந்து கூடும் கடல் வாணிகத் துறைகளாயிருந்தன.

கடற்கரையும் கடலும் வாணிகத்துக்கு மட்டுமே உதவுபவை அல்ல. அவை உப்பு, மீன், மீனெண்ணெய், பவளம், முத்து, சங்கு, சிப்பிகள் ஆகிய கடல்தரு செல்வங்களையும் தருகின்றன. முதன்முதலில் கடலில்மூழ்கி முத்தும் சங்கும் எடுத்தவர்கள் தென்னாட்டுத் தமிழரே. சங்கறுத்து வளையல் முதலியன செய்தல் இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்டே

  1. 4