இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
85
இயற்கையின் இந்தக் களையழிக்கும் வேலையில் பயிர்களும் பேரளவில் உடனழிகின்றன. எனினும், பயிரின் உள்ளீடான ஆக்கச் சத்தி அழிவதில்லை. அது களை அழிந்த பின் மீண்டும் தளிர்க்கின்றது. முன்னைவிடப் பன்மடங்காய்ப் புதிய சூழலில் புதுப்பயிர்கள் தழைக்கின்றன.
பொது மனித வாழ்வு தனி மனித வாழ்வானது. ஆனால், அஃது இயற்கையைபோல ஏறத்தாழ எல்லையற்ற இடப்பரப்பும் காலப்பரப்பும் உடையது. அதன் வாழ்விலும் இயற்கையின் இயற் சீர்திருத்தம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்படுகின்றன. அவை மனித சமூகத்தின் புயல்கள், சூறாவளிகள், மின்னல்கள், காட்டுத் தீக்கள், இடிகளாய்த் திகழ்கின்றன. அவற்றை நாம் வரலாற்றில் புரட்சிகள் என்கிறோம்.
பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சி ஒரு புயல். ஆனால், அது மற்றொரு சூறாவளிக்குரிய கொடிக் கம்பம் மட்டுமே. சுழன்றடிக்கும் சூறாவளிப் புயலுக்கு அது குறிக்கோளாகிய திசைகாட்டும் கருவியாய் அமைந்தது. 1857-ஆம் ஆண்டுப் புரட்சியின் தலைவர்கள் குறிக்கோள்வழி நின்று அதற்குத் திட்டமிட்டார்கள். ஆனால், புரட்சி ஒரு தோட்டமன்று, திட்டத்துக்குட்பட; அது ஒரு புயல்! திட்டமிட்ட தேதிக்கு முன்பே அது சூறாவளியாகப் பீறிட்டுக் கொண்டு வந்தது. அத்தேதிக்கு முன்பே அது சுழன்றடித்தது. மின்னல்கள் மக்கள் அடிமை அமைதியாகிய வானைப் பிளந்து சீறிக் கொண்டு பாய்ந்தன. கார்முகில்கள் எங்கும் படர்ந்தன. சோனாமாரி வாரி அடித்தது. புயலுக்கு எதிர்புயலாக, அடக்குமுறைகளை இடியேறுகளாய்ப் பல இடங்களில் வீழ்த்தின. காட் காட்டிலே கட்டையிடையே கட்டையாய்க் கிடந்த பிழம்புகள் ஒளிப்பிழம்புகளாய் எரிந்து ஒளி வீசின.
புயல் முடிவுற்றது. எங்கும் மண் மேடும் கரியும் புகையும் சூழ்ந்தன.
இவற்றின் உரத்தின்மீதுதான் வாழ்வு- திட்டமிட்ட விடுதலைப் பேரியக்கமான காங்கிரஸ் பேரவை வாழ்வு- தொடங்கிற்று. அது ஒரு விடுதலைப் பூந்தோட்டம். அது தளிர்த்துத் தழைத்துள்ளது; மலர்ந்துள்ளது. இனி அது காய்த்துக் கனிவளம் தரவேண்டும்.