பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

||-

அப்பாத்துரையம் - 12

பூந்தோட்டத்தின் புது வரலாறு காணுமுன் புயலின் இயற்கையாற்றலில் கருத்துச் செலுத்துவோம்.

இயற்கையின் இப்பெரும் போராட்டத்தைத் தலைவர் பெருந்தகை போஸ், இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றார். அதன் வரலாறு எழுதப்புகுந்த திரு. அசோக மேத்தா, அதை இந்தியாவின் முதற்புரட்சி என்று குறிக்கின்றார். ஆனால், வீர சவர்க்கார் அதை இயற்கையின் சத்திகளுள் ஒன்றாக்கி எரிமலை என்று வருணிக்கிறார். எரிமலையின் வெந்தழலில் எல்லா வகைப் பாறைகளும் பொருள்களும் ஒரே அழற்பிழம்பாய் உருகி வார்க்கப்பட்டுவிடும். அதுபோல 1857-ஆம் ஆண்டின் புரட்சி, இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வகுப்பினரிடையேயும் ஒரே ஆர்வமும்,ஒரே உணர்ச்சியும் எழுப்பி, அவர்களை ஒரு தேச மக்களாகக் கிளர்ந்தெழச் செய்தது.

படைவீரர் கிளர்ச்சி மட்டுமன்று, தேசியப் புரட்சி!

பிரிட்டிஷ் ஆதிக்கக்குழு இவ்வெரிமலையைப் படைவீரர் கிளர்ச்சி என்று கூறிற்று. படைவீரர் கிளர்ச்சி அதன் ஒரு பகுதி என்பதும், ஓர் உயிர் நிலைப்பகுதி என்பதும் உண்மையே. அது வேலூரில் நடைபெற்றதுபோன்ற படைவீரர் கிளர்ச்சிகளின் மரபில் வந்தது என்பதும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால், தில்லிப் பேரரசுகளின் மரபில் வந்த கடைசிப் பேரரசி அயோத்தி அரசி, பிரமதேசத்தின் அரசுரிமையாளர் நானா சாகிபு, ஜான்ஸி வீர அரசி லக்ஷிமிபாய், ஜகதீசபுரி மன்னன் குமாரசிங்கு ஆகியவர்களும், தாந்தியாத்தோப்பி போன்ற படைத் தலைவரும், மௌல்வி அகம்மதுஷா, அஸிம் உல்லாகான் போன்ற அரசியல்வாதிகளும் அதில் பங்கு கொண்டிருந்தார்கள். தவிர, படைவீரர் கிளர்ச்சிகளைப் போலவோ அல்லது பாஞ்சாலங் குறிச்சி மைசூர்ப் போர்களைப் போலவோ, அது ஒரு குறுகிய இடத்தில் நடைபெறவில்லை. வடவிந்தியாவின் மிகப் பெரும்பகுதியிலும் அது கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பேரளவில் நடைபெற்றது. தில்லி, மீரத்து, ரோஹில்கண்டு, ஆக்கிரா, காசி, அலகாபாது, பாட்டினா, ஆஜ்மீர் என்னும் பல நகரங்கள் அதன் முக்கியப் போர்க்களங்களாய் நிலவின. போரிட்ட தலைவர்களும், படைகளும் மிகுதி. படைக்கலங்களும் பலவகைப் பட்டவை. ஆனால், குறிக்கோள் ஒன்றாதலால், அது