90
அப்பாத்துரையம் - 12
போலவே, தமிழரும் பிற தென்னிந்தியரும் பொதுவாக இடம் பெறவில்லை. ‘தமிழரின் வீரம் அடிமை வீரமன்று; தேசீய வீரமே' என்பதற்கு இதைவிட நல்ல சான்று வேறு வேண்டுவதில்லை. அவர்கள் ஒரு சுதந்தரப் போரில் வீழ்ந்து, மறு சுதந்தரப் போரில் எழுமுன் பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உள்ளானார்கள்: அவ்வளவே! சீக்கியரையும் மராட்டியரையும் போலவே தென்னிந்திய வீரரும் அடிமை மன்னர் ஆட்சியாலும் புரட்சி தொடங்கிய இடத்தின் தொலையாலும் செயலற்றிருந்தவர் ஆவர். அவர்களின் செயலின்மை இயற்கைச் செயலின்மையன்று; பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சி மைசூர்ப் போர்கள் ஆகியவற்றின் பின் விளைவேயாகும்.
பிராமணரிடமும் உயர் வகுப்பினரிடமும் வடநாட்டில் தேசியக்கனல் கிளர்ந்தெழுந்ததும், தாழ்த்தப்பட்டவரிடம் அது தூங்கிக் கிடந்ததும் உண்மையே. இதுவும் ஓரளவு பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சியின் பயனே. முதலில் பிரிட்டிஷாரின் கருவியாயிருந்த உயர் வகுப்பினர் கிளர்ந்தெழுந்தபோது அவர்களால் அடக்கி வைக்கப்பட்டிருந்த பிற வகுப்பினர் கிளர்ந்தெழாதது எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால், தென்னாட்டின் நிலைமை இதற்கு நேர் மாறானது. இங்கே படைத்துறை தவிர, மற்ற இடங்களில் உயர் வகுப்பினரே அன்றும், பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவுக் காலம் வரையும், அயலாட்சியின் கருவிகளாய் இருந்து வந்தனர். பொதுமக்கள் கிளர்ச்சிகளான பாஞ்சாலங்குறிச்சி மைசூர்ப் புரட்சிகளின் போது இவர்கள் தட்டிக் கொடுக்கப்பட்டார்கள்: சலுகைகள் பெற்று அடிமை மரபினர்களானார்கள். இவர்கள் வடநாட்டில் கிளர்ந்தெழுந்தது போலக் கிளர்ந்தெழாதற்கு இது காரணம். இவர்கள் எழாத போது தாழ்த்தப்பட்டவர்க்குத் தரப்பட்ட சலுகையால், இரு வகுப்பினரிடையே வேற்றுமை எதுவும் ஏற்பட இடமில்லாது போயிற்று. ஆட்சிக் குழுவினரான உயர் வகுப்பினர் எழாதபோது மற்றையவர் எழ வழி ஏற்படவில்லை.
இங்ஙனம் 1857 புரட்சி இந்திய மாநிலப் புரட்சியாய் எழுந்ததாயினும், வரலாற்று மரபு, சூழ்நிலைகள் காரணமாக, இந்தியாவின் முழுநிறை புரட்சி ஆக முடியவில்லை. இதற்கு உலகச் சூழ்நிலைகளும் உதவின. அது 1857க்கு முன்பு