96
அப்பாத்துரையம் - 12
வீரர்கள் மீதும், நாட்டு மக்கள் மீதும் பழிக்குப் பழியாக அடக்குமுறைத்தீயை அள்ளி வீசினான். ஆண்களும் பெண்களும், முதியவர்களும், இளம்பாலகர்களும் இரக்கமின்றிப் படுகொலைக்காளானார்கள். இப்படுகொலை மக்களை அச்சுறுத்தும் எண்ணத்துடனும் அடக்கும் எண்ணத்துடனும் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆனால், இதன் பயனாக வெள்ளை ஆட்சி மீது மாநில மக்களுக்கு இருந்த வெறுப்பும் கொதிப்பும் பன்மடங்கு பெருகின.
ரைப்
அலகாபாதில் ஜூன் 5-ஆந் தேதி கலவரம் தொடங்கிற்று. பீரங்கிகளைக் காசிக்குச் செல்லும் பாதைப் பக்கம் இழுத்துச் செல்லும்படி காலாட்கள் உத்தரவிடப்பட்டார்கள். காலாட்கள் மறுத்தார்கள். அவர்களைச் சுட்டுத்தள்ளும்படி குதி படைகளுக்கு உத்தரவு இடப்பட்டது. அவர்கள் தங்கள் நாட்டு உடன் பிறந்தாரைச் சுடுவதற்கு மாறாக, அவர்களுடன் சேர்ந்து கொண்டு, வெள்ளையதிகாரிகளை எதிர்த்தழித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சி கணத்தில் மறைந்தது. எங்கும் தேசியக் கொடிகளாகிய பச்சைக் கொடிகள் பறந்தன. மௌல்வி லியாகத் அலிகான் தலைமையில் ஒழுங்கான விடுதலையாட்சி வகுக்கப்பட்டது.
சீக்கியப் படைகள் துரோகம் செய்ததுடன் நில்லாது, மீந்த பிரிட்டிஷாருக்குப் பாதுகாப்பாயுமிருந்தன. அலகாபாது கோட்டையினுள் அவர்கள் விடுதலையாட்சியினுள்ளும் நீடித்துத் தங்கியிருந்தார்கள். ஜூன் 11-ஆந் தேதி காசியிலிருந்து நீல் படையெடுத்து வந்தான். அலகாபாது பெற்ற விடுதலையை அந்நகர் மீண்டும் இழந்தது. நீலின் புதிய அலகாபாது படுகொலை பழைய காசிப் படுகொலைகளைப் பொய்யாக்கிற்று.
காசி, அலகாபாது ஆகியவற்றின் கோரக் கொலைகளுக்குக் கான்பூர் பழி வாங்கிற்று.
புரட்சியின் ஒப்பற்ற பெருந்தலைவர்களான நானா சாகிபு, அஸிமுல்லாகான், தாந்தியாத் தோப்பே என்பவர்கள் கான்பூர் பகுதியிலேயே இருந்தார்கள். மற்ற இடங்களைப் போலக் கான்பூர் குறித்த காலத்துக்கு முன் எழாதபடி அவர்கள் பரவி நின்று காத்துக்கொண்டிருந்தார்கள்.