பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

அப்பாத்துரையம் - 12

சார்பிலும் நின்று போரிட்டு, 1858-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆந் தேதி குவாலியரை மீட்கும் பெரும்போரில் காயம்பட்டிறந்தாள்.

‘மாய மகாராஷ்டிரப் புலி' என்று வீர சவர்க்காரால் புகழப்பட்டவர் தாந்தியாத் தோப்பே. அவர் ஜான்ஸி அரசி மாண்ட பின்னும் கங்கைக்கும் நருமதைக்கும் நடுவேயுள்ள பகுதி எங்கும் விடுதலைக் கொடியை ஏற்றியும் இறங்கவிட்டும் பகைவர்களின் பேரெதிர்ப்புக்களைச் சமாளித்து மயிரிழை நெருக்கடிகளுக்கு ஆளாய் நீண்ட போராட்டமாடினார். அடிக்கடி பகைவர் கையில் சிக்கியும் அவர்கள் எக்களிப்புக் கூக்குரலிடையே அவர் தப்பிப் பின்னும் சிறுபுயல்களை எழுப்பி வந்தார். இறுதியில் 1859 ஏப்பிரல் 7-ஆந் தேதி ஒரு நண்பரின் நம்பிக்கைத் துரோகத்துக்காளாகி அவர் சிறைப்பட்டார்.

பிரிட்டிஷாரும் அவர் வீரப்போராட்டத்தின் புகழால் கவரப்பட்டனர். அவர்கள் விருப்பப்படியே புரட்சியின் நிகழ்ச்சிகளை அவர்தம் கைப்பட எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். இங்ஙனம் புரட்சியின் பெரும்புகழ் வீரராகிய அவரே, அதற்கு அழியா வரலாற்றுப் புகழையும் உண்டு பண்ணினார்.

ஏப்பிரல் 18-ஆந் தேதி அவர் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டார்.

புயலாக எழுந்த வடவிந்தியாவின் இப்பெரும் புரட்சி, இந்தியா முழுவதும் இரண்டாண்டுகளில் ஒரே நில அதிர்ச்சியை எழுப்பி, சூறாவளியாக அயலாட்சியை அலைக்கழித்து, மக்கள் அடிமை இருளிடையே மின்னி இடித்தார்த்து, இறுதியில் இருபுறச் சத்திகளையும் சோர்வுறச் செய்து அமைந்தது. இந்தியர் மீண்டும் புரட்சிப் போர் தொடங்கப் பல ஆண்டுகளாயின. ஆனால், அவர்கள் உள்ளத்தின் அடிமை மாசு நீங்கிற்று. பிரிட்டிஷாரோ, அடக்குமுறையிலும் கொடுமையிலும் மாநிலத்தை அடக்கி ஒடுக்கிவிட முடியுமென்ற பழைய நம்பிக்கையைக் கைவிட்டனர்: இனி ஓரளவு ஒழுங்கமைந்த ஆட்சியும் சீர்திருத்தமுந்தான் ஆட்சித் தளையைக் காக்கும் என்பதை உணர்ந்தனர்.