6. பேரவையின் பிறப்பு
பேரவையும் மாநில வாழ்வும்
அரசியல் முறையில் திட்டமான விடுதலை இயக்க வரலாறு, 'காங்கிரஸ்' என்ற ஆங்கில மொழிப்பெயரால் வழங்கும் இந்திய மாநிலப் பேரவையின் வரலாறே என்று கூறலாகும். பேரவைக்கு முற்பட்ட விடுதலைப் போராட்டங்கள் அணையும் கரையுமற்ற புயல் வெள்ளங்கள் அல்லது கானாறுகள். அவற்றை ஒழுங்கமைத்து ஒரே அரசியல் இயக்கமாக்கியது பேரவையே. புயல் வெள்ளமும் கானாறும் வீறமைதியுடைய அகன்ற காவிரியாய், மக்கள் வாழ்வை வளப்படுத்தின.பரந்துபட்ட ஆற்றல் பயனுடைய ஆற்றலாகவும், தற்காலிக ஆற்றல் நிலையான ஆற்றலாகவும் அமைந்தன.
உயிரினங்களின் எலும்புச் சட்டமே, உடலின் உறுப்புக்களை இணைத்து, உடலுக்கு ஓர் உருவம் தந்து, உறுதியும் வலிமையும் அளிக்கிறது. அரசியல் விழிப்பில்லாத காலத்தில் நாட்டு வாழ்வு எலும்பில்லா உயிரினங்களின் உடலியக்கம் போன்றது. சமூக, சமய, அரசியல் நிலையங்களே அவற்றுக்கு எலும்புச் சட்டமாய் அமைகின்றன. தேசிய நிலையங்கள் உடலையும் எலும்புச் சட்டத்தையும் தாங்கும் தண்டெலும்பாய் இலங்குகின்றன. மாநிலப் பேரவை இத்தகைய தண்டெலும்பாய் அமைந்து, விடுதலைப் போராட்டங்களை ஒரே விடுதலை இயக்கமாக்கியுள்ளது. அத்துடன் அது மக்கள் வாழ்வையும் இயக்கங்களையும் நிலையங்களையும் விடுதலை இயக்கத்துடன் பிணைத்து, அனைத்தையும் ஒரே தேசிய இயக்கமாக்கியுள்ளது.
பேரவை தோன்றிய காலமுதல் பேரவையின் வரலாறே மாநிலத்தின் வரலாறாகவும், மாநிலத்தின் வரலாறே பேரவையின் வரலாறாகவும் காட்சியளிக்கின்றன. ஒன்றை விட்டு மற்றொன்றை வேறாக நாம் காண்பது அரிது. மூன்று தலைமுறைகளாக நாம்