பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(114

அப்பாத்துரையம் - 12

அவர் இந்தியா முழுவதும் திக்கு விஜயம் செய்ததுடன் இந்தியாவின் அறிவுச் செல்வத்தை உலகெங்கும் கொண்டு பரப்பினார். அமெரிக்க நகராகிய சிகாகோவில் 1898ல் நடைபெற்ற இரண்டாவது உலக சமயப் பேரவையில் அவர் ஆற்றிய சொற்பெருக்கு அப்பேரவையின் சிறப்பு நிகழ்ச்சியாய், அவரது உலகப் புகழ்க் கொடியையும், இந்தியாவின் புகழ்க் கொடியையும் வானளாவப் பறக்கச் செய்தது.

விவேகானந்த அடிகள் இந்தியாவின் அரசியலின் தன் மதிப்பைப் பேணிய முதற்பெரியாருள் ஒருவர். இந்தியர் நுழைவுரிமையைத் தடை செய்திருந்த கானடா நாட்டிற்கு அவர்அழைக்கப்பட்டபோது, அவர் அதனை மறுத்துத் தம் நாட்டின் மதிப்பைக் காத்தார். அத்துடன் மேனாட்டினர் இந்தியாவைப்பற்றிக் கொண்ட ஏளனம், புறக்கணிப்பு ஆகியவற்றை அவர்தம் சொல் திறமையால் தாக்கி, அதன் உரிமையைக் காத்தார்.

பிரமஞான சங்கமும் திருமதி அன்னிபெஸண்டு அம்மையாரின் தொண்டும்

அறிவுத் துறையில் உலக அரங்கேறிய இந்தியாவை நாடி வந்த உலக இயக்கங்களில் ஒன்று பிரமஞான இயக்கம். விரைவில் இந்தியா அதில் முதன்மை இடம் பெற்றது. அவ்வியக்கம், உலகின் பண்டைச் சமய மரபுகளை ஒருங்கிணைத்து, மேனாட்டு உலகியலறிவியக்கம் தாண்டிச் சமயப்பற்றை வளர்க்க முனைந்தது. அதை நிறுவியவர், மாதுபிளாவாட்ஸ்கி என்ற ரஷ்ய நாட்டுப் பெண்மணி. திபெத்திலேயே அது நிறுவப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதன் செயலரங்கத் தலைமையிடம் 1875ல் அமெரிக்காவில், நியூயார்க்கிலேயே அமைக்கப்பட்டது, முதல் உலகத் தலைவர் காலத்திலேயே அவ்வியக்க முன்னணித் தலைவருள் ஒருவரான அயர்லாந்து நாட்டுப் பெண்மணி திருமதி அன்னிபெஸண்டு அம்மையார் அதனை இந்தியாவுக்குக் கொண்டுவந்து சென்னை அடையாற்றில் அதன் இந்தியத் தலைமை நிலையம் அமைத்திருந்தார். 1907ல் மாது பிளாவாட்ஸ்கி காலமானபின் திருமதி அன்னிபெஸண்டே உலக இயக்கத் தலைவரானார்.