7. இளமைக் குரல்
எதிர்பாராத மாறுபாடும் வளர்ச்சியும்
ல்
கடலின் அலைகள் கரையை அணுகுமிடத்திலேதான் அலையின் ஆற்றல் மிகுதி. கரை பாறை நிறைந்ததாயிருந்தால், அலையின் ஆற்றல் இன்னும் பெரிது. அது பாறையை மோதி அதனை நாளடைவில் தகர்க்க முனைகின்றது. அலையும் பாறையும் இங்ஙனம் போராடும் இடங்களில் பெரிய கப்பல்களின் நிலைகூட ஆபத்தாகிறது. ஆனால், பாறைகளின் எதிர்ப்பால் குமுறி எழும் இவ்வலையின் வேகத்தை மரச்சட்டங்கள் இணைத்த வேலி அழிவுகள் குறைத்துவிட முடியும். செயற்கைத் துறைமுகங்களையும் பாறையடர்ந்த கரையோரங்களையும் பாதுகாக்க இத்தகைய அலைதாங்கிகள் அமைக்கப்படுவதுண்டு.
பாஞ்சாலங்குறிச்சியில் எழுந்து தில்லியில் குமுறிய மக்கள் புயல், அலைகளின் ஆற்றலைத் தடுக்கும் ஓர் அலை தாங்கியாகவே பேரவை தொடக்கத்தில் நிறுவப்பட்டது. ஆயினும், அலைதாங்கி அலைகளின் தாக்குதலில் முறிவுற்றால், அவ்வலை தாங்கியே அலையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கிவிடும். அது ஒரு புதுவகைப் பாறை தகர்க்கும் பொறியாய்விடும். அலை தாங்கியாய் நிறுவப்பட்ட பேரவை விரைவில் இத்தகைய பாறை தகர்க்கும் பொறியாக மாறத் தொடங்கிற்று. அலைதாங்கி பிரிட்டிஷ் ஆட்சிப் பாறையைத் தாக்கித் தகர்க்கும் பொறியாக மாறிய பருவமே பேரவையின் பயிற்சிப் பருவம் ஆகும்.
1885இல் நடைபெற்ற முதற்பேரவைக் கூட்டத்தில் பிரதிநிதிகள் தொகை 72. ஆனால், 1906ல் நடைபெற்ற இருபதாவது பேரவைக் கூட்டத்தில் இத்தொகை 1663 ஆகிப் பெருக்க முற்றிருந்தது. மூன்றாவது ஆண்டில் பார்வையாளர் 3000 பேர் என்பதை அறிகிறோம். ஆனால், 1906ல் பார்வையாளர்