128
அப்பாத்துரையம் - 12
புதிய புரட்சியூழியின் முதல் சிங்க ஏறாகப் பின்னாளில் தொண்டாற்றிய சுரேந்திரநாத் பானர்ஜி ( 1895, 1902 ஆக) இரண்டாண்டுகளில் தலைமைப் பீடத்திலிருந்து முழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தாதாபாயைப் போலவே பார்ஸி சமூகத்தின் பிரதிநிதியான பிரோஸ்ஷா மேத்தா (1890). மேஷ் சந்திரபானர்ஜி (1885, 1892), இந்தியாவின் ஆங்கில நண்பர்களான ஸர்வில்லியம் வெட்டர்பர்ன் (1889, மீண்டும் 1910), ஜார்ஜ் யூல் (1888), ஆல்ஃவிரெட் வெப் (1894), ஸர் ஹென்றி காட்டன் (1904), முஸ்லிம் பெரியார்களான பத்ருதீன் தயாப்ஜி (1887), முகம்மது ரஹிமத்துல்லா ஸஹானி (1896),தென்னிந்தியப் பெரியார்களான ராவ் சாகிபு ஓ.அனந்தாசார்லு (1891), ஸி. சங்கரன் நாயர் (1897) மற்றும் பிரம சமாஜத் தலைவர் ஆனந்த மோகன் போஸ் (1898), ரமேச சந்திர தத்தர் (1899), மராட்டியப் பெரியாரான என். ஜே. சந்தவர்க்கார் (1900), வணிகக் கோமானாகிய தீன்ஷா எதுல்ஜி வாச்சா (1901), லால் மோகன் கோஷ் (1903) ஆகிய பல திறத்துப் பெருமக்களும் பேரவையில் முதல் பருவத்திலேயே தலைமை தாங்கியுள்ளனர்.
1905-ஆம் ஆண்டில் காசியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின் தலைவரே காந்தியடிகளால் தம் ஞான குருவெனப் போற்றப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலே ஆவர். அரசியல் கொந்தளிப்புக்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டபிற்காலப் பேரவையால் போதுமான அளவு கவனிக்கப்பட முடியாமற் போன கல்வித் துறை, சமூகப் பணி முதலிய ஆக்கத் துறைத் திட்டங்களை நிறைவேற்ற ‘இந்திய ஊழியர் சங்கம்' என்ற நிலையத்தை நிறுவியவர் இவர். பேரவையினரால் மதிக்கப்பட்டது மட்டுமன்றி, அதிலிருந்து விலகிப் பின்னாளில் மிதவாத சங்கமமைத்தவர்களாலும் இவர் தலைசிறந்த வழிகாட்டியாய்க் கொள்ளப் பட்டார். அத்துடன் இந்திய மக்கள் மதிப்போடு ஆட்சியாளர் மதிப்பையும் இவர் ஒருங்கே பெற்றிருந்தார்.
புதிய குரல்
பேரவை அளவிலும் தலைவர்களின் செல்வாக்கிலும் பெருகுந்தோறும் அதன் தொனியும் குரலும் மாறி வந்தன.