இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
135
இந்தியாவின் இறுதி விடுதலை நாள்வரை இந்தக் குரலுக்கு அயலாட்சி சிறிதும் செவி கொடுத்ததாகத் தெரியவில்லை. அது மட்டுமன்றி, இது வகையில் விடுதலை இயக்கம் வளருந்தோறும் ஒவ்வொரு படியிலும் ஆட்சியாளர் போக்கு, மக்கள் தன் மதிப்பையும் விடுதலைப் பற்றையும் புண்படுத்துவதாகவே இருந்தது. 1857க்குப் பின் புரட்சியை அடக்க அவர்கள் மேற்கொண்ட புதிய சட்டங்கள் போதாவென்று இந்திய மன்னர்கள், படைவீரர்கள் கிளர்ச்சிகளையடக்க வாணிகக் கழக ஆட்சியாளர் 1818லிருந்து 1827 வரை நிறைவேற்றிய பழைய பஞ்சடைந்த சட்டங்கள்கூட 1897க்குப் பின் உயிர் கொடுக்கப் பட்டன. இவற்றால் குற்றஞ் சாட்டப்படாமலே எவரும் ஆட்சியாளரால் காவலில் வைக்கப்பட அதிகாரம் ஏற்பட்டது. குடி உரிமைக்கும் குடியாட்சிக்கும் மாறான இச்சட்டங்கள் மக்கள் கோபத்தைத் தூண்டின.
படைத்துறை இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம், இரண்டாவது ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டது. ஆயிர ரூபாய்க்குக் குறைந்த வருமானங்களுக்கு வருமானவரி விதிக்கக்கூடாதென்றும்;படைத்துறை உயர்பணிகள் இந்தியருக்குத் தரப்பட வேண்டுமென்றும்; அதற்கான படைத்துறைப் பயிற்சிக் கல்லூரிகள் இந்தியாவிலேயே நிறுவப் படவேண்டுமென்றும் மூன்றாவது ஆண்டுப் பேரவை கோரிற்று.
இவையும் நெடுநாள் கவனிக்கப்படாதவை. இந்தியாவில் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரி ஏற்பட்டது நெடுநாளுக்குப் பிற்பட்டே ஆகும்.
மக்கட் குரல்
மூன்றாவது பேரவையில் தீர்மானங்களுக்கிடையே நாம் முதல் தடவையாக ஒரு மூலையிலிருந்து மக்கட்குரலை வியப்புடன் கேட்கிறோம். அதன் தொனியும் தோரணையும் அன்று எதிர்பாராதவையாயிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. “நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுகூட வயிறார உண்ண வகையற்றவர் இந்நாட்டில் நாலரைக் கோடி பேர் இருக்கின்றனர். இது ஆட்சியாளரே காட்டுகிற புள்ளி விவரம். இத்தகையவர்களுக்கு ஒரு வேளை உணவாவது தரத்தக்க