பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

அப்பாத்துரையம் - 12

வாதித்து, அடக்குமுறைச் சட்டங்களைக் கண்டித்தது.1900,1901 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலும்,அஸ்ஸாமிலும் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் துயரங்கள் எடுத்துக் கூறப்பட்டன.உயர்தரக்கல்வி பரவுவதைக் கர்ஸான் பெருமகனாரின் பல்கலைக் கழகச் சட்டம் தடுப்பதாக அதனை 1903 பேரவை கண்டித்தது. அடுத்த ஆண்டு 20- ஆம் பேரவை கர்ஸானின் பெருஞ் செலவுகளையும் திபெத்துப் படையெடுப்பையும் வன்மையாக மொழிகளால் கண்டித்தது.

1904லேயே பேரவை வங்காளப் பிரிவினைக்குக் கர்ஸான் செய்து வரும் முயற்சியைக் கண்டித்தது. ஆனால், 1905ல் பிரிவினை நடந்தேறிவிட்டது. அதன் பயனாகப் பேரவை கொண்ட சீற்றம் அளவிடற்பாலதன்று. தீவிரக் கட்சித் தலைவர்களான லாலா லஜபதிராய், திலகர் ஆகிய இருவரும் இதற்கான எதிர் நடவடிக்கை எடுக்க முனைந்தனர். பின்பு ஐந்தாம் ஜார்ஜ் அரசரான இளவரசர் வரும்போது அவருக்கு வரவேற்பளிக்காது முகமறுப்பளிக்க வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தினார்கள். ஆயினும், பேரவை முற்றிலும் பிரிட்டிஷாரின் நல்லெண்ணத்தில் இன்னும் நம்பிக்கை அற்றுவிடவில்லை. ஆகவே, தீர்மானம் தோல்வியுற்றது. ஆங்கிலப் பொருள்களை மறுப்பதென்ற தீர்மானம் மட்டும் எப்படியும் நிறைவேற்றப் பட்டது.

1906இல் பேரவையில் தீவிரக்கட்சி முற்போக்கு அடைவது தெரிந்து, மிதவாதிகளால் பிரிட்டனிலிருந்து தாதாபாய் நௌரோஜி வரவழைக்கப்பட்டுத் தலைவராக்கப்பட்டார். இப்போது முற்றிலும் வெண்தாடி வேந்தராய் விளங்கிய அப்பெரியாரின் கனிவுமிக்க தலைமையுரை, மிதவாதிகளின் எல்லையில் நின்றே தீவிரவாதிகளுக்கு வாழ்த்துரை வழங்குவதா யிருந்தது. அவர் இந்தியாவின் குறிக்கோள் உண்மையான பாறுப்பாட்சி அல்லது தன்னரசே என்றும், அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அது எடுக்குமென்றும் வீறிட்டு முழங்கினார். கிழச் சிங்கத்தின் குரல் இளஞ்சிங்கங்களையும் இன்னும் தயங்கி மயங்கிய மிதவாதிகளையும் ஒருங்கே தற்காலிகமாக இணைத்தது.