8. புயல் எதிர் புயல்
மாநிலமும் வங்கமும்
பாரத தேசம் ஒரு பெரிய முக்கோணம்- ஆனால், அதை மையமில்லாத முக்கோணம் என்னலாம். ஏனென்றால், பாரதத்தின் உயிர்நிலை இயக்கங்களும் பேரரசியக்கங்களும் பெரும்பாலும் முத்திசைக் கோணங்களிலிருந்து தொடங்கி, மையத்தைச் சுற்றிச் சக்கராகாரமாகவே சென்றுள்ளன. பேரவை இயக்கம் தொடக்கத்தில் விடுதலைப் போராட்ட மரபில் வந்த புரட்சி மனப்பான்மையுடன் கலவாமலே இயங்கிற்று. திடுமென அதனைப் புரட்சிகரமாக மாற்றிய சத்திகள் கிழக்கே வங்காளத்திலேயே முதல்முதல் எழுந்தன. பின்பு அவை தெற்கே தமிழகத்தில் எதிரொலித்து, பாஞ்சாலம், மராட்டிரம், கூர்ச்சரம் ஆகிய இடங்களில் கவர் விட்டுப் பரந்தன.
மகாத்துமா காந்தியடிகள் வங்கத்தைப் பற்றிய ஓர் அழகிய பொன்னுரையை நமக்கு வழங்கியுள்ளார்: “வங்கத்தை இந்தியாவின் ஒரு மாகாணம் என்று கொள்வதுதான் இயல்பு. ஆனால், ‘இந்தியாதான் வங்கத்தின் ஒரு மாகாணமோ!' என்று எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. ஏனென்றால், வங்கத்தின் தேசிய இயக்கத்தை நான் இந்தியாவெங்கும் காண்கிறேன்:
ஆனால், வங்கத்திலேயே அதன் முழுநிறை உயிராற்றலைச் செறிவுறக் காண முடிகிறது. அது மட்டுமன்றி, வங்கத்தின் இசை, கலை, இலக்கியம், கவிதை ஆகியவற்றை நாம் இந்தியா முழுவதும் கேட்கிறோம்; ஆனால், முழு நிறை உறவில் அவற்றை வங்கத்திலேயே காண்கிறோம். எனவே, நிலவியல் முறைப்படி வங்கமே இந்தியாவின் ஒரு மாகாணமாயினும், பண்பாட்டு முறைப்படி இந்தியாவே வங்கத்தின் ஒரு மாகாணம் என்னலாம்.” வங்கத்தைப் பற்றிய அடிகளின் பொருள் பொதிந்த பொன்னுரை இதுவே.