பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

அப்பாத்துரையம் - 12

ஒற்றுமையும் ஊட்டினார். வங்கத்தில் எழுந்த பொறி, மாநிலமெங்கும் கொழுந்து விட்டெரிந்தது கண்டு, கர்ஸான் பெருமகனார் கலக்கமுற்றார்.

பேரவை இயக்க வரலாற்றில் வங்கப் புரட்சி 'சுதேசி இயக்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதுவே இந்தியாவின் பெரிய முதல் அரசியல் இயக்கமாகும். வங்கப் புனைகதையாசிரியர் பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடத்தில்’ வங்க அன்னையின் புகழ் பாடப்படுகிறது. 'வந்தே மாதரம்' என்று தொடங்கும் அந்தப் பாடலே, பாரத தேசத்தின் தேசியப் பாடலாயிற்று. அதன் முதலடியே சுதேசி இயக்கத்தின் போர்க் குரலாயமைந்தது. வங்கத்திலும் மாநிலமெங்கும் அக்காலம் முதல் 'வந்தே மாதரம்' என்ற பாடலைப் பாடுவதற்கு அரசியலாரின் தடை ஏற்பட்டிருந்தது. ஆனால், எங்கும் மக்கள் அதைப் பாடினார்கள். 'வந்தே மாதரம்' என்ற சொற்களை மாநிலமெங்கும் சுவர்களில் அந்நாள் முதல் கண்டு வருகிறோம். தேசீயத்தின் உள்ளத்தில் தீட்டப்பட்ட சொற்களைத் தேசச் சுவர்களில் தீட்டி நிறைக்க இளவுள்ளங்கள் துடித்தன.

வங்கத்திலும் மாநிலத்தின் பல பாகங்களிலும் 'வந்தே மாதரத்தையே' முழக்கமாகக் கொண்ட பத்திரிகைகள் எண்ணற்றவை தோன்றின. கர்ஸானின் அடக்குமுறைப் புயலில் அவை பற்பல தொல்லைகளுக்காளாக்கப்பட்டும், மேன்மேலும் தியாகத் தீயில் குதித்து ஒன்று பத்தாகப் பெருகின. பிரமபாந்த உபாத்தியாயர், பூபேந்திர நாதர், அட்சய குமாரர், அரவிந்தர் ஆகிய வங்கச் செல்வரும், லோகமானியர், பராஞ்சிபே ஆகிய மராட்டிய வீரரும், ஜஸ்வந்தராய், அதவாலி, லாலா லஜபதி ராய் ஆகிய பாஞ்சாலக் காளையரும் இப்புது வேள்வியில் கலந்து புனிதமடைந்தனர். விபினசந்திர பாலர் மீதும் அரவிந்தர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. பாலர் கடுஞ்சிறைக்காளானார். அரவிந்தர் நாடு கடத்தப்பட்டு, நீண்ட நாள் உலகில் பல நாடுகளிலும் திரிந்து, இறுதியில் தமிழகத்தில் புதுச்சேரியிலேயே தங்கி, யோகவாழ்வாற்றி வந்தார்.

தமிழகத்தில் சுதேசி இயக்கம் ஒரு தனிப் பேரியக்கமாய் வளர்ந்தது. வங்க நாட்டுப் புரட்சி தெற்கே மற்றொரு வகை 'வங்க'ப் புரட்சி ஆயிற்று. ('வங்கம்' என்பதற்குத் தமிழில் ‘கப்பல்’