பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

அப்பாத்துரையம் - 12

முதல் அவர் தொழிலாளர் சங்கங்கள் பல அமைத்து, தொழிலாளர் பெரும் போராட்டங்களும் நடத்தினார்.

வங்கத் தேசியமும் தமிழகத் தேசியமும்

வங்கத் தேசிய இயக்கத்தின் பல பண்புகளை நாம் தமிழகத்திலும் சிறப்பாகக் காண்கிறோம். வங்கத்தில் தேசிய இயக்கம் வருமுன்னரே மொழி, கலை, சமய இயக்கம் சிறந்திருந்தது. தமிழகத்திலும் நாம் அதே நிலையைக் காண்கிறோம். அத்துடன் தமிழக மரபுகள் வங்க மரபு கடந்து பழங்கால வீர அரச மரபு, பத்தி இயக்கம், தாய்மொழி இயக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாய் இயங்குவதையும் நாம் கவனிக்கலாம். பண்டை வீர வாழ்வின் புது மலர்ச்சியை நாம் பாஞ்சாலங்குறிச்சியில் கண்டது போலவே, பண்டைய சமய, கலை, இலக்கிய வாழ்வை மறைமலையூழியின் பல பண்புகள் காட்டுகின்றன.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் கட்டபொம்மன் திடலுக்கு அருகிலேயே பிறந்தவர். அவர் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபை, பிரமஞான சங்கம் ஆகியவற்றிலும், மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம் ஆகியவற்றிலும் தொடர்புடையவராய்ச் சமயப் பணி, தமிழ் மொழிப்பணி, அரசியற்பணி, தொழிலாளர் பணி ஆகிய யாவற்றிலும் முழுப்பங்கு கொண்டிருந்தார். தமிழில் திருக்குறள் உரைகளும் தொல்காப்பிய உரைகளும் பதிப்பித்தும், நூல்கள் எழுதியும், புலவர்களுக்கு அவர் வழிகாட்டியாய் இருந்தார்.

வ.உ. சிதம்பரனார் கப்பற்கழகத்தைப் பெருத்த எதிர்ப்புகளுக்கிடையிலும் இடர்களுக்கிடையிலும் அயராது நடத்தி, வெள்ளையர் தலைமையிலிருந்த பி.ஐ.எஸ்.என். கழகத்தை எதிர்த்துப் போட்டியிட்டார். அத்துடன் வங்கத்தில் விபின சந்திரர் சிறைப்பட்ட நாளை ஒட்டிப் பேரவை இயக்க எதிர்ப்புக் கொண்டாட்டங்களையும் தமிழகமெங்கும் சிறப்பாக நடத்தினார். அவர் இச்சமயம் தலைமை மேற்கொண்டு இயக்கிய தொழிலாளர் வேலை நிறுத்தமும் வெற்றி கண்டது.

இச்சமயம் பழைய புரட்சி மரபில் வந்த ஒரு கொடுஞ்செயல் நிகழ்ந்தது. மாவட்டத் தலைவரான ஆஷ் என்ற வெள்ளையரை