146
தேசியக் கவிஞர் பாரதியார்
அப்பாத்துரையம் - 12
வ.உ.சிதம்பரனார் இயக்கத்துக்கும் வங்கப் புரட்சிக்கும் மற்றொரு தொடர்பும் உண்டு. இரண்டும் இலக்கியத் தொடர்பு கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடல் ஒரு கலைஞர் புனைகதையில் தந்த பாடல் என்பதை மேலே குறித்தோம். அத்துடன் வங்க தேசிய இயக்கத்தில் மலர்ந்த இரு தேசிய மலர்களாகக் கவிஞர் தாகூர், கவிக்குயில் ஸரோஜினியார் ஆ கியவர்களைக் கூறலாம். ஆயினும், வ.உ.சி.யின் இயக்க மலராகத் தமிழகத்தில் விளங்கிய கவிஞர் பாரதியார் வங்கத் கவிஞரைக் காட்டிலும் தேசியத்தில் ஊன்றித் தோய்ந்த தனித் தேசிய மலர் ஆவர். மற்றவர்கள் பாடலில் தேசியம் படர்ந்துள்ளது. ஆனால் பாரதியார் பாடல் தேசியத்திலேயே கருவுயிர்த்து முளைத்து மலர்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத் தேசிய வாழ்வின் எந்தக் கூறும் பாரதியார் பாடல் யாழை அதிர வைக்காமலில்லை.
தமிழர் கண்ட சுதந்தரம் எத்தகையது?
“வீர சுதந்தரம் வேண்டிநின் றார்பின்னை வேறொன்று கொள்வாரோ?- தினம் ஆரமு துண்ணுதற் காசைகொண் டார்கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?"
என்று கேட்கிறார் பாரதியார்.
வீர சிதம்பரனார் செக்கிழுத்தது, திலகருடன் திமிர் பிடித்த வெள்ளையன் வாதாடியது ஆகிய இந்திய தேசியக் காட்சி களுடன், பெல்ஜியத்தின் வீறு மிக்க வீழ்ச்சி, சார் அரசன் சரிந்த காட்சி ஆகிய உலக நிகழ்ச்சிகளையும் நாம் பாரதியாரின் கவிதைகளில் மட்டுமே ஒருங்கே காணக்கூடும். ஏனெனில், அவர் தேசியம் அரசியல் கடந்த மக்கள் தேசியமாய், தேசம் கடந்த உலகத் தேசியமாய் இலங்கிற்று! விடுதலைப் பெருநாள் தொலைவிலிருக்கையிலேயே அதன் முழு நிறை பண்பை முழுதுற அவர் கனவு கண்டார்,
‘விடுதலை! விடுதலை! விடுதலை! பறைய ருக்கும் இங்குத் தீய புலைய ருக்கும் விடுதலை!’