பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

149

எழுந்தபோது, ஆரவாரம் மிகுந்து, கூட்டம் அடுத்த நாள் ஒத்திவைக்கும்படி நேர்ந்தது. அடுத்த நாள் தலைவர் தம் பீடத்தில் அமர்ந்த பின் திலகர் முதல் திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து மேடை ஏறியபோது, எதிர்பார்த்த நெருக்கடி தொடங்கிவிட்டது. மேடைமீது எறியப்பட்ட ஒரு பாதுகை, போரின் முதல் சமிக்கையாயிற்று. இருபுறமிருந்தும் மேடையை நோக்கி மக்கள் அலைகள் உருண்டோடின. கம்பும், தடியும், தொப்பிகளும், நாற்காலிகளும் யாவும் உயிர் பெற்று மோதுபவையாய் நடனமாடின. கூட்டம் மீட்டும் கலைந்தது.

திலகருக்கு இச்சமயம் சில மராட்டிய இளைஞர் மட்டுமே துணையாயிருந்தனர். ஆயினும், கூட்டம் தொடங்குமுன்னரே அவர் தம் நண்பரும் தீவிரவாதிகளில் செல்வாக்கில் முதன்மை வாய்ந்தவருமான வ.உ.சிதம்பரனாரிடம் நிலைமைகளை விளக்கிக் கூறியிருந்தார். வ.உ. சிதம்பரனார் தேசியத்துக்கும் நட்புக்கும் உறுதி வாய்ந்த ஒரு கொழுகொம்பு போன்ற வராதலால், முன் கூட்டியே தமிழகத்திலிருந்து தக்க ஆதரவு திரட்டிச் சென்றிருந்தார். அத்தமிழ்க்காளையர் மராட்டிய இளைஞருடன் நின்று, திலகரை அன்று மிதவாதிகளின் மும்முரத் தாக்குதலிலிருந்து காத்தனர். கலை வளர் வங்கத்துடன் கைகோக்கத் தவறாத தமிழகம், அன்று வீர மராட்டியத்துடனும் கைகுலுக்கிப் புன்முறுவல் பூத்து

நின்றது!

மிதவாத அலை

இரண்டு நாள் கூட்டமும் கலைவுற்ற பின் பல மிதவாதிகள் கையெழுத்துடன் 28-ஆந் தேதியே ஒரு தனிக் கூட்டம் கூட்டப் பட்டது.ராஷ்பிகாரியே அதில் தலைவராயிருந்து, பேரவைக்கான புதிய சட்டதிட்டங்களை வகுத்தார். கலைக்கப்பட்டுவிட்ட இருபத்து மூன்றாவது பேரவையை அடுத்த ஆண்டு தொடர்ந்து சென்னையில் கூட்டுவதாகத் தீர்மானம் நிறைவேறிற்று.

தமிழகத் தலைவர் வீர சிதம்பரனார் செக்கிழுக்கச் சென்ற ஆண்டிலேதான் இது நிகழ்ந்தது. வ.உ.சிதம்பரனாரின் உதவி இல்லாததால், திலகர் கையிழந்தவராய்விட்டார். எனவே, பேரவை மீண்டும் மிதவாதிகள் பேரவையாகவே விளங்கிற்று.